மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில காலங்களாக பா.ஜ.க.விற்கும், சிவசேனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் உத்தவ்தாக்கரே பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் விரைவில் மகாராஷ்ட்ரா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என் உடல்நிலை குறித்து கவலைப்படும் எதிரணியினருக்கு பலத்தை காட்டுவேன். ஒரு காபந்து அரசாங்கம் இருப்பது போல நினைக்கும் அவர்கள்தான் ஒரு காபந்து எதிர்க்கட்சி. அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வார்கள்.
நாம் ஏன் பா.ஜ.க.வை விட்டு ஒதுங்கினோம். இன்று அவர்கள் காட்டுகின்ற வெற்று இந்துத்துவா என்பது அதிகாரத்திற்கான வேட்கையைத் தவிர வேறறொன்றுமில்லை. 25 ஆண்டுகளாக அவர்களுடன் கூட்டணி வைத்தது வீணானது என்ற எனது முந்தையை அறிக்கையை நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். 25 ஆண்டுகளாக நாங்கள் அவர்களை வளர்த்தெடுத்தது துரதிஷ்டவசமானது.
புனே வந்து தனித்து போட்டியிடுவோம் என்று அமித்ஷா சவால் விடுத்தார். அந்த சவாலை தசரா பேரணியில் நாங்கள் எற்றுக்கொண்டுள்ளோம். உங்களுக்கு தைரியம் இருந்தால் தொண்டர்களின் பலத்தில் போட்டியிடுங்கள். எங்களுக்கு சவால்விடுவது, அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகளை பின்னால் இருந்து அனுப்புவது ஒன்றும் தைரியம் அல்ல.
நாங்கள் இந்துத்துவாவை விட்டுத்தரவில்லை. நாங்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியைத்தான் முறித்துள்ளோம். பா.ஜ.க. ஒன்றும் இந்துத்வா. நீங்கள் நாட்டை பார்த்துக்கொண்டால், நாங்கள் மகாராஷ்ட்ராவை பார்த்துக்கொள்கிறோம் என்று பால்சாகேப் பா.ஜ.க.விடம் கூறியிருந்தார். ஆனால், அவர்கள்தான் நமக்கு துரோகம் செய்தனர். எங்களை அழிக்க முயற்சித்தனர். நாங்கள் பல ஆண்டுகளாக அவர்களை வளர்த்தோம். அவர்கள் வென்ற பிறகு யூஸ் அண்ட் த்ரோ கொள்கையை எடுத்துக்கொண்டனர்.
பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்ததுபோன்று அடிமைத்தன சூழல் உருவாகியுள்ளது. இது இந்துத்வா அல்ல. உண்மையான இந்து இதை அனுமதிக்கமாட்டான். ஒருவேளை நாம் இன்று இதை விட்டுவிட்டால், மீண்டும் அடிமைத்தனம் புகுந்துவிடும். யார் எமெர்ஜென்சிக்கு எதிராக போராடினார்களோ, அவர்களே நாட்டில் எமெர்ஜென்சி போன்ற சூழலை உருவாக்கியுள்ளனர். இதை முறியடித்து சிவசேனா கண்டிப்பாக முன்னேறும்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் நான்காவது இடத்தை பிடித்துள்ளோம். ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்த போது இருந்ததை காட்டிலும் அதிக இடங்கள் வென்றுள்ளோம். சட்டசபை, மக்களவைத் தேர்தலைப் போல இந்த தேர்தலில் தீவிரமாக நாங்கள் போட்டியிடவில்லை. எதிர்க்கட்சியில் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சியில் அவ்வாறு செய்யவில்லை. இப்போது முதல் அதை தவிர்ப்போம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற 1791 பதவியிடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. 419 பணியிடங்களை வென்றது. தேசியவாத காங்கிரஸ் 381 பணியிடங்களை வென்றது. காங்கிரஸ் 344 பணியிடங்களை வென்றது. சிவசேனா 296 பணியிடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்