இயல்பு நிலைமை திரும்பியவுடன், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான மாவட்டநல்லாட்சிகுறியீட்டு அட்டவணையை வெளியிட்டு பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசியதிரு அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 மற்றும் மறுவரையறை சட்டம், 2002 ஆகியவற்றின் அடிப்படையில் ஜம்மு காஷ்மிர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. விரைவில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாம் அளித்த வாக்குறுதியை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, இயல்பு நிலைமை திரும்பியவுயடன் ஜம்மு காஷ்மீருக்கு கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான அனைத்துப் பிரிவு மக்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த அரசு பாடுபடும் என்றார்.
ஜம்முகாஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, மூன்றுகுடும்பத்தினர் மட்டுமே ஆட்சி செய்ததாக கூறிய அவர், இந்த ஆட்சிக் காலங்களில் மக்களுக்காக எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். தற்போதைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அமித் ஷா, சுயநலசக்திகளால் பரப்பப்படும் வதந்திகளைநம்பி இளைஞர்கள் ஏமாறவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
இயல்பு நிலைமை என்றால் என்ன? அதன் வரையறை என்ன? என்பதை அமித் ஷா விளக்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வு எழுப்பி வருகின்றனர்
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " ஜம்மு காஷ்மீரில் அமைதி, வளர்ச்சி என்ற ஒட்டுமொத்த பொய்யான சொல்லாடலை உருவாக்க இம்மக்களை அச்சமூட்டிய பிறகும், இயல்பு நிலைமை திரும்பவில்லை என்று இந்திய அரசு ஒப்புக்கொள்வது சுயமுரணானது" என்று கூறினார்.மக்களின் அமைதியை இயல்புநிலை என்று தவறாகக் கருதக்கூடாது என்பதையும் இது நிருபித்துள்ளது" என்றும் கூறினார்.
மக்கள் மாநாட்டு கட்சித் தலைவர் சஜ்ஜத் லோன், " இயல்பு நிலை என்றால் என்ன? ஜம்மு - காஷ்மீரின் இயல்புநிலையை யார் வரையறுப்பார்கள்?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் "ஒரு கூட்டாட்சி கட்டமைப்பில், இயல்பு நிலை என்ற கருத்தாக்கத்தின் மூலம் அதிகாரத்தை தட்டிப் பறிப்பது நியாயமா? மாநில அந்தஸ்து இல்லாத குரலற்றவர்களாக வாழ்கையை சுமக்கும் ஒவ்வொரு நாளும் அவமானங்களை தாங்கி செல்கிறோம். இந்திய கூட்டசியும் இந்த அவமானத்தை தங்கி செல்கிறது" என்று தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து:
ஜம்மு- காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ சிறப்பு அந்தஸ்த்தை கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி ரத்து செய்தது. காஷ்மீர் நிர்வாகத்தை தானே வைத்துக் கொள்ள ஏதுவாக, ஜம்மு காஷ்மீர் சீரமைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.