பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்  80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்தார். இந்நிலையில்  உணவக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் காண்போர் மனதில் படபடப்பை உருவாக்கும் அளவிற்கு உள்ளது. 


இந்த வெடிகுண்டு மிகவும்  வீரியம் கொண்ட IED ரக வெடிகுண்டு என வெடிகுண்டு பரிசோதனைக்குழு கூறியதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். மேலும் அவர், வாடிக்கையாளர் போல வந்த ஒருவர்தான் பையை விட்டுச் சென்றுள்ளார். அந்த பையில் இருந்துதான் வெடிகுண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார். 






 (வீடியோ நன்றி: ஊடகவியலாளர் சஞ்சீவி சடகோபன்)


ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பு  குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரிக்க 7-8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இது குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு. ஒரு இளைஞன் வந்து ஒரு சிறிய பையை வைத்திருந்தான், அது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெடித்தது. சுமார் 10 பேர் காயமடைந்தனர். சம்பவத்தை விசாரிக்க 7-8 குழுக்கள் அமைக்கப்பட்டன. நாங்கள் எல்லா கோணங்களிலும் தேடுகிறோம். நான் ஒவ்வொருவரையும் கேட்கிறேன். பெங்களூர்வாசிகள் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார். 


பாஜகவின் பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா  எக்ஸ் தளத்தில், ஒன்பது பேர் காயமடைந்த வெடிவிபத்திற்கு என்ன காரணம் என்று கஃபே உரிமையாளரிடம் பேசியதாகக் கூறினார். அதில் "ராமேஸ்வரம் கஃபே நிறுவனர் நாகராஜிடம் தனது உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு பற்றிப் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற பையினால் வெடிப்பு ஏற்பட்டது என்றும் சிலிண்டர் வெடிக்கவில்லை என்றும் அவர் எனக்குத் தெரிவித்தார். அவர்களது ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். வெடிகுண்டு வெடிப்பு பற்றிய முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து தெளிவான பதில் அளிக்கவேண்டும்" என்று சூர்யா கூறினார்.


பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி கேள்விப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்க வேண்டும் என்று கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரர் கூறினார்.