இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் கடந்த 2016-ஆம் சஃபா பைக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சஃபா வளைகுடா நாடுகளில் பிரபலமான மாடலாக இருந்தவர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இம்ராங்பதான் என்ற ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் வெளிவந்த இவர்களின் புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மகன் இம்ராங்பதானை தோளில் சுமந்தாவாறு இர்பான் பதான் நிற்க, அருகில் மனைவி சஃபா இருக்கிறார்.
ஆனால் அதில் சஃபாவின் முகம் எடிட் செய்து மறைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். "இதுதான் முற்போக்குத்தனமா இர்ஃபான்", "மனைவியின் முகத்தை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவா இர்ஃபான் இப்படி செய்திருக்கிறார்" என பலரும் இர்பானை சீண்டியவாறு கமெண்ட் செய்திருந்தனர்.
இந்நிலையில் இதற்கு ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள இர்ஃபான் பதான், இந்த புகைப்படத்தை எனது மகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியது தன் மனைவிதான் என்றும், தன் மகனுக்காக உருவாக்கப்பட்ட பக்கத்தை அவர்தான் கையாளுவதாக தெரிவித்தார். தனது மனைவியின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அவரே அவர் முகத்தை மறைத்து பதிவிட்டிருக்கிறார் என குறிப்பிட்ட இர்ஃபான் பதான், "நான் அவளின் துணைதான், அவளின் எஜமானன் இல்லை" என பளார் பதிலடி ஒன்றினை தெரிவித்துள்ளார்.
மேலும் #herlifeherchoice (அவள் வாழ்க்கை அவள் விருப்பம்) என குறிப்பிட்டுள்ளார் இர்பான் பதான் மற்றும் அவரது சகோதரர்கள் இருவரும் இணைந்து தங்கள் சொந்த நிறுவனமான "கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்ஸ்" மூலம் டெல்லியில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள இர்ஃபான் பதான் கொரோனா சூழலில் இந்திய மக்களுக்கு உதவி செய்யும் பொறுப்பும் கடமையும் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்
முன்னதாக முதல் அலையின்போதும் 4 ஆயிரம் மாஸ்க்குகளை இலவசமாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.