கேரளாவில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கால்வாய்க்குள் சுற்றுலா பயணிகள் காரை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெயர் பலகை இல்லாத ஊருக்கு கூட கூகுள் மேப் வழிகாட்டும் நிலை வந்து விட்டது. அந்த அளவுக்கு அதன் தேவையும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் செல்லும் வழியில் இருக்கும் மக்களிடம் வழி கேட்டு செல்வோம். தற்போது எதற்கெடுத்தாலும் அதான் கூகுள் மேப் இருக்கிறதே என சொல்லி விடுகிறோம். ஆனால் இது சில நேரங்களில் ஆபத்தில் முடிவடைகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. 


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கேரளாவுக்கு 4 பேர் காரில் சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று அதிகாலை 3 மணியளவில் மூணாறில் இருந்து ஆலப்புழாவுக்கு காரில் பயணித்துள்ளனர். வழி தெரியாத நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டி வந்திருக்கின்றனர். கோட்டயம் அருகே குருப்பந்தரா என்ற இடத்தில் கார் வந்த நிலையில் அங்கிருந்த சாலை இரண்டாக பிரிந்தது. 






அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் அவர்கள் காரை செலுத்தியுள்ளனர். அந்த சாலை மழை காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்துள்ளது தெரியாமல் அவர்கள் சென்றுள்ளனர். சாலையை மூழ்கடித்தபடி கால்வாயில் இருந்து மழை நீர் சென்றுள்ளது. இதனால் காரை திணறியபடி ஓட்டிச்செல்ல அது கால்வாய் இருக்கும் பகுதிக்குள் சென்றுள்ளது. 200 மீட்டர் சாலையில் இருந்து தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உள்ளே இருந்தவர்கள் அலறினர். 


ஆனால் கார் எதிர்பாராத நிலையில் தரை தட்டிய நிலையில் சுதாரித்துக் கொண்டு 4 பேரும் காரில் இருந்து வெளியேறினர். அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காரை மீட்க முயன்றனர். பின்னர் தீயணைப்பு படையினர் காலையில் வந்து போராடி மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.