UP Accident: உத்தரபிரதேசத்தில் பேருந்தின் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பேருந்து மீது டிரக் மோதல் - 11 பேர் பலி:


ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள குதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, தாபா ஒன்றை ஒட்டி பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அவ்வழியாக பாலாஸ்ட் கற்களை ஏற்றி வந்த டிரக், பேருந்தி மீது மோதியுள்ளது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிரக், அந்த பேருந்தின் மீது அப்படியே கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழக்க, 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






புனித யாத்திரையின் போது விபத்து:


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் இருந்த அனைவரும் உத்தரகாண்டை நோக்கி புனித யாத்திரைக்காக சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும்,பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் சீதாபூர் மாவட்டத்தின் கம்லாபூர் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஷாஜஹான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா விபத்து தொடர்பாக கூறுகையில், "இரவு 11 மணியளவில் குதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. பூர்ணகிரி சென்று கொண்டிருந்த அந்த பேருந்துக்குள் சிலர் அமர்ந்திருக்க, தாபாவில் சில பக்தர்கள் உணவு அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு டிரக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதி பின்பே அதன்மேலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மொத்தம் 11 பேர் இறந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்” என தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


நாட்டின்பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மோசமான விபத்துகள் அரங்கேறியுள்ளன. ராஜ்கோட்டில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அரங்கில் நடைபெற்ற தீ விபத்தில், பல குழந்தைஉட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளங்கள் குழந்தைகள் உயிரிழந்தன. 12 பச்சிளங்குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.