ஐதராபத்தை சேர்ந்த இளம் பெண் தீப்தி என்பவருக்கு 2 கோடி ரூபாயில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. தீப்தி  தனது பி.டெக் கல்லூரி படிப்பை ஐதராபாத்தில் உள்ள Osmania பொறியியல் கல்லூரியில் படித்தார்.  படிப்பில் படு சுட்டியான அவருக்கு மேற்படிப்பு படிப்பதற்கான உதவித்தொகை கிடைத்தது. இதனை அடுத்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் எம்.எஸ் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அங்குசென்று படித்தார். கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாக, அமெரிக்க முதலீட்டு நிதி நிறுவனம் ஒன்றின் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில்  அமெரிக்காவின் சியாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்துக்கொண்டு தகுதி பெற்றார். இதன் அடிப்படையில்  தலைமை அலுவலகமான சியாட்டிலில் பணிபுரிவதற்கான அழைப்பு வந்துள்ளது. அதனை ஏற்ற தீப்தி வருகிற 17-ஆம் தேதி முதல் இரண்டாம் நிலை மேம்பாட்டு பொறியாளராக பணிபுரிய உள்ளார். அவருக்கு ஆண்டு வருமானமாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீப்தியின் தந்தை டாக்டர்.வெங்கண்ணா, அரசு தடயவியல்  துறையில் நிபுணராக உள்ளார். தனது உயர்கல்வியான எம்.எஸ்- ஐ முடிக்காத நிலையிலும் கூட அமேசான், கோல்ட்மென், சாச்ஸ் போன்ற பிரபல நிறுவனங்களில் இருந்த வந்த வேலைகளை படிப்பு நிமித்தமாக புறக்கணித்துள்ளார் தீப்தி.  தேர்வாகியுள்ள 300 மாணவர்களில் தீப்தி மட்டுமே அதிக ஆண்டு வருமானத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அன்றாட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதை  நான் உறுதியாக நம்புகிறேன், இதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்பதே தீப்தி தனது Linked-In முகப்பில் வைத்திருக்கும் கோட்பாடாகும். இதன் மூலம்  தொழில்நுட்பத்தை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெளிவாகிறது
கடந்த 2014- 2015 ஆம் ஆண்டுகளில் தீப்தி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மாணவர் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.