ஹைதராபாத்தில் இஸ்லாமியர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


முன்னதாக மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் (எம்பிடி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜெத் உல்லா கான் இது குறித்து யூடியூப் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், சையத் லத்திஃபுதீன் எனும் ஊபர் டிரைவர்,  ஹைதராபாத் நகரில் ஷேக்பேட்டையில் இருந்து அல்காபூர் சாலை வழியாக வாடிக்கையாளரை அழைப்பதற்காக சென்றதாகவும்,  அப்போது அவரது கார் ஜன்னல்களைத் தாக்கிய நான்கு நபர்கள் ’ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






"நான் அவர்களைக் கடந்து வண்டியை நேராக ஓட்டினேன், ஆனால் சாலை அங்கு தடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் என்னைப் பின்தொடர்ந்தனர். இருவர் புல்லட்டிலும், நான்கு பேர் ஆக்டிவாவிலும் வந்திருந்தனர். அவர்கள் எனது காரை அடைந்து கற்களை வீசத் தொடங்கி, ”ஜெய் ஸ்ரீராம் என்று சொல்” எனக் கட்டளையிட்டனர்.


நான் அவர்களில் ஒருவரைத் தள்ளிவிட்டு சிறிது நேரம் ஓடினேன். நான் உதவிக்காக கத்திக் கொண்டிருந்ததால், அங்கிருந்த ஒரு சிறிய குழு எனக்கு கைகொடுத்தது. அதன் பின் அவர்கள் எனக்கு உறுதுணையாய் என்னுடன் காரில் திரும்பினர்” என பாதிக்கப்பட்ட நபர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.


 






மேலும் இந்த வீடியோவில் தான் காவல் துறையினரை அழைத்ததாகவும், ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றும், இறுதியாக ஒரு மணி நேரம் சம்பவ இடத்துக்கு காவலர்கள் வந்ததாகவும் லத்தீஃபுதீன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக பாதிக்கப்பட்ட லத்தீபுதீன் மற்றும் அம்ஜெத் உல்லா கான் இருவரும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.