ஹைதரபாத் : பூனையின் தொடர்ச்சியான சத்தத்தால் எரிச்சலடைந்த 17 வயது சிறுவன் ஒருவன் பூனையின் உரிமையாளரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கடந்த வியாழக்கிழமை இரவு இறந்தாலும், பாதிக்கப்பட்டவரின் நண்பர் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


ஹைதரபாத் மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண். 10ல் உள்ள மிதிலாநகரில் உள்ள டாக்டர் மேனனின் வீட்டில் ரங்காரெட்டி மாவட்டம், நல்லாபூரைச் சேர்ந்த 20 வயதான ஹரிஷ்வர் ரெட்டி என்ற சிந்து மற்றும் 17 வயது சிறுவன்  ஆகியோர் தங்கியிருந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் 20 வயதான இஜாஸ் ஹுசைன் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த பிரான் ஸ்டில்லிங் ஆகியோரும் அதே வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து காவலாளிகளாக வேலை செய்து வந்தனர்.


இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி இரவு எஜாஸ் மற்றும் பிரான் இருவரும் தங்கள் பணியை முடித்துக்கொண்டு அறைக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பூனையை கண்டுள்ளனர். அதை பார்த்ததும் ஆசையில் இஜாஸ் ஹுசைன் தனது அறைக்கு தூக்கி வந்து கொஞ்சியுள்ளார். இதனால் அந்த பூனை தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளது. 


பூனை எழுப்பிய சத்தத்தால் பக்கத்து அறையில் இருந்த ஹரிஷ்வர் ரெட்டி தூக்கம் கலைந்துள்ளது. இதுகுறித்து ரெட்டி கவலையுடன் புலம்ப, குடிபோதையில் இருந்த சிறுவன் கோபத்துடன் அவர்களது அறைக்குச் சென்று பூனையை தொந்தரவு செய்ததைக் கண்டு சத்தமிட்டுள்ளார். 


இதன் காரணமாக அங்கு லேசான தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த சிறுவன், எஜாஸ் ஹுசைன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தான். பலத்த தீக்காயம் அடைந்த எஜாஸ் சிகிச்சைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு அன்றிரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


முதலில் 17 வயது சிறுவனின் நண்பன் ஹரிஷ்வர் ரெட்டி காவல்துறையினரிடம், எஜாஸ் உடலில் தற்செயலாக தீப்பிடித்துக்கொண்டதாக பொய்யான தகவலை கொடுத்துள்ளார். பின்னர் இறந்தவரின் நண்பர் பிரான் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் சிறுவன் மற்றும் ஹரிஷ்வர் ரெட்டி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.