Bipin Rawat: இந்தியாவின் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத், கடந்த 2021ம் ஆண்டு நீலகிரியில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்தார்.
பிபின் ராவத் மரணம்:
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று நடந்த, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் அப்போதைய ராணுவ முப்படை படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். தமிழகத்தின் குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த விபத்தில், ஜெனரல் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று முன் தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில், டிசம்பர் 8, 2021 அன்று நடந்த Mi-17 விபத்து, "மனிதப் பிழை (விமானப் பணியாளர்)" காரணமாக நிகழ்ந்தது என்று மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கை
18வது மக்களவையின் நிலைக்குழு அறிக்கையில், 2017 முதல் 2022 வரையிலான 'பதின்மூன்றாவது பாதுகாப்புக் காலத் திட்டத்தில்' மொத்தம் 34 இந்திய விமானப்படை விபத்துக்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டின் போது, மொத்தம் ஒன்பது விபத்துகள் நடந்தன, டிசம்பர் 8, 2021 அன்று நடந்த விபத்து "மனிதப் பிழை (ஏர்க்ரூ)" காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் ராவத்தின் மரணத்திற்கு வழிவகுத்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் விமானியின் தவறு என ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், விபத்து "மனிதப் பிழை" காரணமாக நிகழ்ந்தது என்பதை அரசே உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணை முறை
பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்களுக்குள் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டது. இது விமானியின் இடஞ்சார்ந்த திசைதிருப்பலுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான மிகவும் சாத்தியமான காரணத்தை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விமான தரவு ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்த பின்னர் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
விபத்தின் போது நடந்தது என்ன?
ஜெனரல் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 12 ஆயுதப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற Mi-17 V5 ரக விமானம், தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரிக்கு புறப்பட்டு, தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பிபின் ராவத் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சௌர்ய சக்ரா விருது பெற்ற குரூப் கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார்.