உலகின் 2-வது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா விரைவில் மாறும் என மத்திய அமைச்சர் மனோகர் லால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழு நேற்று நடைபெற்றது. இதில், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கலந்து கொண்டார்.



993 கிலோமீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் சேவை:


உறுப்பினர்களிடையே உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகையை சமாளிக்க நகர்ப்புற போக்குவரத்து ஒரு முக்கியமான அம்சம் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.


நாடு முழுவதும் 23 நகரங்களில் சுமார் 993 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருப்பதாகவும், நாட்டில் 28 நகரங்களில் சுமார் 997 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் தெரிவித்தார்.


மத்திய அமைச்சர் என்ன சொன்னார்?


உலகின் 2-வது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா விரைவில் மாறும் என்றும் மனோகர் லால் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து,  உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.


இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும் அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இது தவிர வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


இதையும் படிக்க: Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!