கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுப்பள்ளி ரயில்நிலையம் புதிய பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


கின்னஸ் புத்தகத்தில் இடம்:


உலகின் மிக நீளமான நடைமேடையை கொண்ட ரயில்நிலையமாக, கர்நாடகாவின் ஹூப்பள்ளி ரயில் நிலையம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதன்படி, 1,507 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 12ம் தேதியன்று கின்னஸ் அமைப்பு, ஹூப்பள்ளி ரயில் நிலைய நடைமேடையின் நீளத்தை கணக்கிட்டதாக தெரிவித்துள்ளது.


ரூ.20 கோடி செலவில் கட்டுமானம்:


சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நடைமேடையானது, ஹுப்பள்ளி யார்டை மறுவடிவமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கர்நாடகாவின் ஹூப்பள்ளி-தர்வாட் பகுதியில் எதிர்காலத்தில் அதிகரித்து வரும் ரயில்களின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அந்த யார்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமேடையானது ஒரே நேரத்தில் இரு திசைகளில் இருந்து இரண்டு ரயில்கள் வரவோ அல்லது புறப்பட்டு செல்லவோ உதவுகிறது என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூப்பள்ளி ரயில் நிலையம் அதிகாரப்பூர்வமாக ஸ்ரீ சித்தரூட சுவாமிஜி நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


முந்தைய சாதனை முறியடிப்பு:


முன்னதாக, 1,363 மீட்டர் நீளம் கொண்ட கோரக்பூர் ரயில்நிலைய நடைமேடை தான் உலகின் நீளமான ரயில்வே நடைமேடையாக இருந்தது. தற்போது அந்த சாதனை ஹூப்பள்ளி ரயில்நிலைய நடைமேடை தகர்த்துள்ளது. இதன் மூலம் அங்கு கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுவதுடன், பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் முக்கியமான ரயில்வே இணைப்பு முனையமாக ஹூப்பள்ளி ரயில்நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வடகர்நாடகாவின் முக்கிய வர்த்தக மையமாக ஹூப்பள்ளி பகுதி விளங்குகிறது. அதில் பெரும்பங்காற்றி வரும் இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே 5 நடைமேடைகள் இருக்கும் நிலையி, தற்போது புதியதாக 3 நடைமேடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


நீளமான ரயில்நிலைய நடைமேடைகளின் பட்டியல்:


1. ஹுப்பள்ளி, கர்நாடகா


2. கோரக்பூர், உத்தரபிரதேசம்


3.கொல்லம் ரயில் நிலையம், கேரளா


4. காரக்பூர் மேற்கு வங்காளம், 


5. ஸ்டேட் ஸ்ட்ரீட் சுரங்கப்பாதை சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா


6. பிலாஸ்பூர் ரயில் நிலையம் சத்தீஸ்கர், இந்தியா


7. செரிடன் ஷட்டில் டெர்மினல் ஃபோல்கெஸ்டோன், இங்கிலாந்து


8. ஜான்சி உத்தரப் பிரதேசம்


9. கிழக்கு பெர்த் ரயில் நிலையம் பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா 


10.கல்கூர்லி ரயில் நிலையம், மேற்கு ஆஸ்திரேலியா


ரூ.530 கோடி திட்டம்:


ஹோசப்பேட்டை-ஹூப்பள்ளி-தினைகாட் பிரிவின் மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி கடந்த ஞாயிறன்று தொடங்கி வைத்தார். 530 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த மின்மயமாக்கல் திட்டம் மின்சார இழுவையில் தடையற்ற ரயில் இயக்கத்தை நிறுவுகிறது. புனரமைக்கப்பட்ட ஹோசப்பேட்டை நிலையம் பயணிகளுக்கு வசதியான மற்றும் நவீன வசதிகளை வழங்கும். இது ஹம்பி நினைவுச் சின்னங்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.