திரிபுராவில் நாய் ஒன்றை வாகனத்தில் கட்டி இழுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். 


சமூகத்தில் அவ்வப்போது உயிரினங்கள் மக்களால் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. நாயை மாடியில் இருந்து தூக்கிப் போட்டது, யானையின் மீது தீப்பிடித்த டயரை எறிந்தது, பசுவின் உணவில் வெடி வைத்தது என பலவிதமான சம்பவங்கள் இந்தியாவில் எந்த மூலையில் நடந்தாலும் கடும் கண்டனத்துக்கு ஆளானது. அந்த வகையில் திரிபுராவில் நாய் ஒன்றை வாகனத்தில் கட்டி இழுத்து செல்லும் வீடியோ கடும் சர்ச்சையை கிளப்பியது. 






சாலையில் பயணித்த பிஷால் சிங் என்பவர் இதனைக் கண்டு ஓட்டுநர் சிங்கிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் இது எனது விருப்பம் என சொல்லிய ஓட்டுநர் வாகனத்தை தொடந்து இயக்கியுள்ளார். இதில் நாய் உயிரிழந்து விட்டது.இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி பலரும் மாநில முதல்வரையும், காவல்துறையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தினர்.


இந்நிலையில் சப்ரூம்-அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார், குற்றவாளிகளை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


மேலும் நாய்க்குட்டியை வாகனம் மூலம் இழுத்துச் சென்ற கொடூரமான செயல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல்  இதுதொடர்பாக போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் கூறியிருந்தார்.