கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தீவிர பரவல் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாக பரவி வரும் அதேவேளையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை  ஆறுதல் அளிக்கிறது. 




கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் 2,10,77,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3980 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழப்பு 23 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம் கொரோனா அதிவேகமாக அதிகரித்தாலும், மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நம்பிக்கையை விதைத்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 3,29,113 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் குணமானவர்களின் சதவீதம் 81.99%ஆக உள்ளது. இதற்கிடையே கொரோனாவில் தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி, பிறகு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி என அரசு அறிவித்தது. பின்னர் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி என்றும், அது தொடர்பாக Cowin இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 




இணையதள குழப்பம், பல மாநிலங்களுக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் சென்று சேராததாலும், முறையான அறிவுறுத்தல்களை மத்திய அரசு கொடுக்காததாலும் இன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே யார் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றாலும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதற்காக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பென்ஷன் கார்டு, என் ஆர் பி ஸ்மார்ட் கார்டு ஆகிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.


இந்நிலையில் அடையாள அட்டையே இல்லாதவர்கள் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. சாலை ஓரத்தில் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், சாதுக்கள், சிறைச்சாலையில் இருப்பவர்கள் என இந்தியாவில் அடையாள அட்டையே இல்லாமல் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. 




இந்நிலையில் அடையாள அட்டையே இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது. அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு மாவட்ட செயலாக்க குழுவே பொறுப்பு என்றும், மாவட்டம்தோறும் அடையாள அட்டை இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டுமென்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறைத்துறை, முதியோர் காப்பகங்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள அடையாள அட்டை இல்லாத நபர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி பொறுப்பேற்று இதனை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.