சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 




பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. தீவிர பரவல் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாக பரவி வரும் அதேவேளையில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை  ஆறுதல் அளிக்கிறது. 


கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இந்தியாவில் 2,10,77,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3980 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழப்பு 23 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம் கொரோனா அதிவேகமாக அதிகரித்தாலும், மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நம்பிக்கையை விதைத்துள்ளது. 







கடந்த 24 மணி நேரத்தில் 3,29,113 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் குணமானவர்களின் சதவீதம் 81.99%ஆக உள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. ஆனாலும் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 85.3ஆக உள்ளது. நேற்று மட்டும் 57,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 


அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசமும் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் சீராகவே உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 80.2%ஆக உள்ளது. மொத்தமாக உபியில் 11,22,669 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். டெல்லியை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 19,209 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக 11,43,980 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்திய தலைநகரை பொருத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் 91.2 ஆக உள்ளது.




மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், உயிரிழப்பு அதிகரித்து வருவதும் தொடர்ந்து வருவதால், இந்தியாவில் திரும்பும் நம்பிக்கை சூழல், மாநில அளவில் தமிழகத்திலும் திரும்ப வேண்டும். முறையான கட்டுப்பாடுகளை பின்பற்றி தமிழக மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும்.