குறைவான ஆடைகளை அணிவதன் மூலமாகத்தான் ஒருவர் பெரிய ஆளாக இருக்க முடியும் என்றால் மகாத்மா காந்தியை விட ராகி சாவந்த்தான் பெரிய ஆளாக இருக்க முடியும் என உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் பாஜக சார்பில் ’அறிவுஜீவிகளின் சந்திப்பு’ எனும் பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத்தலைவராக இருக்கும் ஹிருதாய் நாராயண் தீக்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஒரு புத்தகத்தை எழுதுவதன் மூலமாக மட்டும் ஒருவர் அறிவாளியாக இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் இத்தனை வருடங்களாக 6000-க்கும் அதிகமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தி மிகக்குறைவான ஆடைகளைத்தான் அணிவார். அவர் ஒரே ஒரு வேட்டியை மட்டும்தான் சுற்றிக்கொண்டார். அப்போது நாடே அவரை தந்தை என அழைத்தது. யாராவது தங்கள் ஆடைகளைக் களைவதன் மூலம்தான் பெரியவர்களாக ஆக முடியுமெனில் ராக்கி சாவந்த் மகாத்மா காந்தியை விட மிகப்பெரியவராக இருந்திருப்பார் என தெரிவித்தார். அவர் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதனை தொடர்ந்து தனது உரையை தெளிவுபடுத்தும் வகையில் அவர் ஹிந்தியில் தொடர்ச்சியான ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் சமூக ஊடகங்களில் சில நண்பர்கள் எனது பேச்சின் வீடியோவின் கிளிப்பை வேறு விதமான அர்த்தத்துடன் புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன். உன்னாவோவில் நடந்த அறிவு ஜீவிகளின் சந்திப்பு’(பிரபுத் சம்மேளன்) எனும் விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நான் ஒரு அறிவார்ந்த எழுத்தாளர் என என்னை அறிமுகப்படுத்தினார். அப்போதுதான், சில புத்தகங்களை எழுதுவதன் மூலமாக ஒருவர் அறிவாளியாக முடியாது. மகாத்மா காந்தி குறைவான ஆடைகளை அணிந்தார். நாடு அவரை தந்தை என அழைத்தது. குறைவான ஆடைகளை அணிவதன் மூலம் ராக்கி சாவந்த் காந்தியாக முடியாது என்பதைத்தான் அவ்வாறு தெரிவித்தேன் என விளக்கியுள்ளார்.