புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பிறழ்வை உடனடியாக கண்டறிய பிரத்தியோக ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை வடிவமைக்க கொரோனா மரபியல் வேறுபாடுகளைக்  கண்டறியும், இன்சாகாக் (INSACOG) கூட்டமைப்பின் ஆய்வளார்கள் யோசித்து வருகின்றனர்.


முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியது. ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 66 மற்றும் 46 வயதுமிக்க இந்த இரண்டு பேரின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   





பிசிஆர் சோதனை போதுமா? 

பாலிமரீஸ் செயின் ரியாக்ஷன் என்று அறியப்படும் RT-PCR சோதனைகள் அதிக உணர்திறன் மற்றும் நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. எபோலா (Ebola) வைரஸ் மற்றும் ஜிக்கா (Zika) வைரஸ் போன்ற தொற்றுக் காலங்களில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சோதனையில் சார்ஸ்- கோவ்- 2 (கொரோனா தொற்றை எற்படுத்தும் வைரஸ்) வைரஸ் கிருமியின் மூலக்கூறுகளில் (குறிப்பாக , வைரஸின் ஸ்பைக் புரதத்தில்) உள்ளதா என்பதை  கண்டறிகிறது. 

 

இந்த மூலக்கூறுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உண்டா இல்லையா என்பதை பிசிஆர் சோதனை உறுதி செய்கிறது. ஆனால்,  பிசிஆர் சோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் பிறழ்வுகளை (ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான், கப்பா) கண்டறியமுடியாது. ஆய்வங்களில் மட்டுமே புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரிவாக கணிக்க முடியும்.  


கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதங்களின் உதவியுடன் மனித உயிரணுக்களை பாதிக்கிறது. வைரஸின் ஸ்பைக் புரதம் மனித சுவாசக் குழாய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள ACE2 ஏற்பிகளுடன் பிணைத்துக் கொள்கிறது. வைரஸ் தொற்றியவுடன், வைரஸ் மரபணு மனித உயிரணுக்களில் நுழைந்து, வைரசின் ஆயிரம் பிரதிகள் வெறும் பத்து மணி நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவான வைரஸ்கள் அருகிலுள்ள அணுக்களுக்கு குடியேறுகின்றன.



சார்ஸ்- கோவ்- 2 வைரஸ், தனது பைக் புரதங்களில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் புதிதாக உருமாறுகிறது. இந்த மாற்றப்பட்ட மூலக்கூறுகளை அடையாளம் காண முடியாமல் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வரக்கூடும். இருந்தாலும், வைரஸ் மற்றப் பகுதிகளில் உள்ள மூலக்கூறுகளின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனை நோய்த் தொற்றை உறுதி செய்யும். எனவே, ஸ்பைக் புரதத்தில் கொரோனா தொற்றுக்கான மூலக்கூறுகள் கண்டறிய முடியாமல், மற்ற மூலக் கூறுகளின் அடிப்படையில் நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அது ஒமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 



தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமைக்ரான் கொரோனா தொற்று கிட்டத்தட்ட 52 மாற்றங்கள் கொண்ட தொகுப்பாக உள்ளது.குறிப்பாக, வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 26-32 மாற்றங்களைக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸின் இந்த மரபியல் மாறுபாடுகள் இயற்கையானது. ஒமிக்ரான் தொற்று 500%  கூடுதலாக பரவும் தன்மை கொண்டது. டெல்டா மாறுபாட்டை விட ஸ்பைக் புரதத்தில் இருமடங்கு மாற்றங்களைக் கொண்டுள்ளது. உருமாறிய ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.  இருந்தாலும், ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகளிலும் ஸ்பைக் புறதத்தில் மாற்றங்கள் கொண்டிருப்பதால், ஒமிக்ரான் தொற்றைக் கண்டறிய மரபணு வரிசை முறைகளை கையாள வேண்டியுள்ளது.