கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பணியாளர் ஒருவர் தன் மனைவியின் அதீத சுத்தம் காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனக் கோரியுள்ளார். தன் மனைவியின் சுத்தம் மீதான அதீத கவனத்தால், அவரது மனைவி சமீபத்தில் டிடர்ஜெண்ட் பயன்படுத்தி அவரது லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன் ஆகியவற்றைக் கழுவியுள்ளார். கேட்பதற்கு சீரியல் கதை போல இருக்கும் இந்தச் சம்பவம் உண்மையாகவே பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.
ராகுல் - சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி பெங்களூருவின் ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்தவுடன் இருவரும் இங்கிலாந்து சென்றுள்ளனர். அங்கு ராகுல் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, சுமதி அவர்களது வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொண்டார். அப்போது இருவரிடையிலும் எந்தப் பிரச்னையும் இல்லை.
எனினும், இருவரின் திருமண வாழ்க்கையிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் குழந்தை பிறந்த போது சுமதியின் ஓசிடி என்றழைக்கப்படும் Obsessive-Compulsive Disorder (OCD) என்ற மனநோய் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதீத சுத்தம் வேண்டி அவர் மேற்கொண்ட செயல்கள் அவரது கணவரை எரிச்சலடையச் செய்துள்ளது. ஒவ்வொரு முறையும் ராகுல் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன், அவர் தனது உடைகள், ஷூக்கள், ஸ்மார்ட்ஃபோன் முதலானவற்றை வற்புறுத்தி சுத்தம் செய்துள்ளார் சுமதி.
இது இந்தத் தம்பதிகளுக்கு இடையில் பிரச்னைகள் ஏற்படுத்தத் தொடங்கியவுடன், இருவரும் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன் குடும்ப நல ஆலோசனை பெறத் தொடங்கியுள்ளனர். அதனால் சற்றே இருவரும் நெருங்கி வாழத் தொடங்க, அவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று பரவியவுடன், இந்தத் தம்பதியின் பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. சுமதியின் ஓசிடி அதிகரிக்கத் தொடங்க, அவர் வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளித்துக் கொண்டே இருப்பது எனப் புதிதாக பணிகளைச் செய்துள்ளார்.
`லாக்டவுனின் போது கணவர் வீட்டில் இருந்தே பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வியப்படையச் செய்யும் வகையில், சுமதி அவரது அலுவலக லேப்டாப்பையும், ஸ்மார்ட்ஃபோனையும் டிடெர்ஜெண்ட் பயன்படுத்தி கழுவியுள்ளார். தனது புகாரில் ராகுல் தன் மனைவி ஒரு நாளுக்கு 6 முறைக்கும் மேல் குளிப்பதாகவும்; தான் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை சுத்தம் செய்வதற்கென்று பிரத்யேகமாக மற்றொரு சோப் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்’ என்று இந்த வழக்கில் தம்பதிகளுக்கு ஆலோசனை கூறும் மனநல ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ராகுலின் தாய் மரணமடைந்த பிறகு, அடுத்த 30 நாள்களுக்கு வீட்டைச் சுத்தம் செய்வதாகத் தன் கணவரையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார் சுமதி. `இந்த விவகாரத்தில் பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பும் குழந்தைகளைத் தினமும் பள்ளிக்கூட சீருடைகள், ஷூக்கள், பேக் ஆகியவற்றைத் தினமும் பலவந்தப்படுத்தி சுமதி சுத்தப்படுத்தியதால் ராகுல் கடுமையாகக் கோபமுற்றுள்ளார்’ என்று கூறுகிறார் மனநல ஆலோசகர்.
மனைவியின் நடத்தையின் மீது கடும் அதிருப்தி கொண்ட மென்பொருள் பணியாளரான ராகுல் குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டில் குடியேறியுள்ளார். சுமதி தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வந்ததால், அவர்கள் இந்த வழக்கைக் குடும்ப நல ஆலோசனைக்காக மாற்றி அனுப்பியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் மூன்று முறை ஆலோசனை வழங்கப்பட்டும் அது விவாகரத்தை நோக்கியே திரும்பியுள்ளது. மனநல ஆலோசகர்கள் சுமதிக்கு மன நல சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கூறிய போது, சுமதி தன் நடத்தை சாதாரணமாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். எனினும் அவரது கணவர் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.