கொரோனா தொற்றின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் முதன்முதலாகக் கடந்த நவம்பர் 24-ம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானா நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் B.1.1.529 என்னும் புதிய உருமாற்றம் (Mutation) ஏற்பட்டுள்ளது.


தற்போது இந்தியா உள்ளிட்ட 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. கர்நாடகாவில் இரண்டு ஆண்களுக்கு இன்று (டிச.2) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தொற்றின் வேகம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது முந்தைய வைரஸ்களைவிட அதிவேகத்துடன் பரவும் என்பதால், உலக சுகாதார நிறுவனம் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தானதா, அதன் அறிகுறிகள் என்ன? சிறப்பு சோதனைகள் தேவைப்படுமா? இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்குமா? என்பன உள்ளிட்ட கேள்விகள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளன.


இதுகுறித்து தொற்றுநோய் சிறப்பு மருத்துவரும் தமிழக அரசின் சிறப்பு வல்லுநர் குழு மருத்துவருமான குகானந்தம் 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்துக்கு அளித்த விரிவான பேட்டி.


''ஒமிக்ரான் வைரஸ் எப்படி உருவானது?


பொதுவாக வைரஸ்கள் மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிர்களைச் சார்ந்து வாழ்பவை. வைரஸின் இருப்புக்குத் தடை ஏற்படும்போது, அவை தங்களை உருமாற்றிக்கொண்டு உயிர் வாழ முயற்சிக்கும். அந்த வகையில் பீட்டா வைரஸ் 1 முறை உருமாறியது. டெல்டா வைரஸ் 2 முறை உருமாற்றம் அடைந்தது. டெல்டா ப்ளஸ் வைரஸில் எந்த உருமாற்றமும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா வைரஸ் 32 முறை தன்னை உருமாற்றிக்கொண்டு, ஒமிக்ரான் வைரஸாகி உள்ளது. வைரஸ் உருமாறும்போதெல்லாம் அதன் பரவும் தன்மை அதிகமாகும். இதனால்தான் ஒமிக்ரான் வைரஸ் அதிகவனம் பெற்று, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஒமிக்ரான் வைரஸின் தொற்றுப் பரவல் வேகம் எப்படி இருக்கும்? பாதிப்பு அளவு எவ்வாறாக இருக்க வாய்ப்புண்டு? தடுப்பூசி போட்டோர் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியுமா, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி (Immune Escape) ஒமிக்ரான் என்ன செய்யப் போகிறது என்பதுதான் தற்போதைய முக்கியக் கேள்விகளாக உள்ளன.


ஒமிக்ரான் வைரஸுக்கெனத் தனி அறிகுறிகள் உள்ளனவா?


இதுவரை தனித்த அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு 12 இடங்களில் நோய் பாதிப்பைக் கண்டறிய (Genome sequence) சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒமிக்ரான் தொற்று பாதித்த 23 நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். ஒமிக்ரான் உருமாறிய சில நாட்களில் கண்டறியப்பட்டுவிட்டதால் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


ஒமிக்ரான் வைரஸைக் கண்டறிய ஆர்டி- பிசிஆர் பரிசோதனை போதுமா? சிறப்பு சோதனைகள் தேவைப்படுமா?


டெல்டா வைரஸ் பரவலின்போது மக்களுக்கு நுரையீரல் தொற்று அதிகம் ஏற்பட்டது. அதிக சோதனைகள் தேவைப்பட்டன. ஆனால் ஒமிக்ரான் வைரஸைப் பொறுத்தவரை அவையெதுவும் தேவைப்படாது. தொற்றுப் பரவலின் வேகத்தை மட்டும் கருத்தில்கொண்டால் போதும்.



ஒமிக்ரான் தொற்றைத் தடுப்பதில் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளதே, உண்மையா? பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா?


இல்லை, இது பொய்யான தகவல். அனைத்து விதமான தடுப்பூசிகளுமே தொற்றைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். விடுபட்ட அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.


இந்தியர்களின் வாழ்வியல், உணவு முறைகளால் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று முதல் அலையின்போது கூறப்பட்டது. ஒமிக்ரான் வைரஸால் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்குமா? 


இந்தியர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்காது. ஒமிக்ரான் தொற்று, வழக்கமான குளிர், காய்ச்சலாகத்தான் வந்து செல்லும் என்று நம்புகிறேன். எனினும் எந்த நோய் வந்தாலும் 60 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்ட இணை நோய் உள்ளோர் அதிக கவனத்துடன், தனிமையில் இருக்க வேண்டும், தடுப்பூசி போடாமல் விடுபட்டோர், செலுத்திக்கொள்ள வேண்டும். டெல்டா வைரஸ் பாதிப்பில் 70 சதவீத இறப்பு 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத்தான் ஏற்பட்டது.  


எந்த வைரஸும் உருமாற்றம் அடையும்போது வீரியம் அடைவதாக நான் பார்த்ததில்லை. ஒமிக்ரானைப் பொறுத்தவரையில் புரதச்சத்தில் மாற்றமில்லை. ஸ்பைக் புரோட்டீனில்தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கரோனா தடுப்பூசிகள் நிச்சயம் உதவிகரமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?


அரசுகள் தேவையான நடவடிக்கைகளை முழுவீச்சில் எடுத்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து வந்தோரைக் கண்காணிக்கிறார்கள். சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றைத் தாண்டி, ஆய்வகங்களில் ஒமிக்ரான் தொற்றுப் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.



ஒமிக்ரான் வைரஸில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?


முந்தைய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடாது பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகிய 4 நடவடிக்கைகளையும் விடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொண்டாலே பேண்டமிக் (பெருந்தொற்று) காலத்தில் இருந்து என்டமிக் (நோய்த்தொற்று முடிவுற்ற) காலத்துக்கு விரைவில் செல்வோம்.


இறுதியாக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


ஒமிக்ரான் தொற்றுப் பரவலின் வேகம் அதிகமெனினும் கடந்த காலங்களில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. ஒமிக்ரான் வைரஸைப் பார்த்து அச்சம்கொள்ளத் தேவையில்லை. அதற்காகக் கட்டவிழ்த்த நிலையிலும் இருக்க வேண்டியதில்லை. கொரோனா தடுப்பு வழிமுறைகளை முன்னெச்சரிக்கையுடன் கடைப்பிடித்தால் போதும்''. 


இவ்வாறு தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம் தெரிவித்தார்.


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com