Pincode History: பின்கோடில் உள்ள 6 இலக்கங்கள் உணர்த்துவது என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


பின்கோட் (அஞ்சல் குறியீட்டு எண்)


உங்கள் வீட்டிற்கு ஒரு பார்சலை டெலிவரி செய்ய விரும்பினாலும் அல்லது உங்கள் பகுதியைப் பற்றி தெரிவிக்க விரும்பினாலும் பின்கோட் அவசியமாகிறது. இது உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிப்பதை மேலும் எளிதாக்குகிறது. இதன் காரணமாக எந்த ஒரு பொருளையும் எளிதாக உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யலாம். புதியதாக உங்கள் பகுதிக்கு வரவிரும்புவோர் வழிதேடுவதும் எளிதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பின்கோட் எவ்வாறு தொடங்கப்பட்டது? எந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறதா. அதற்கான விடை இந்த தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.


பின்கோட் என்றால் என்ன ?


முதலில், பின்கோடு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் . பின்கோடு அதாவது " அஞ்சல் குறியீட்டு எண் " என்பது இந்தியாவில் அஞ்சல் விநியோக அமைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு எண் குறியீடாகும். இந்த குறியீடு 6 இலக்கங்களை கொண்டிருக்கும். இந்த குறியீடு ஆனது நாட்டில் உள்ள எந்த தபால் அலுவலகத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறது . இந்தக் குறியீட்டின் உதவியுடன், அஞ்சலை அதன் சரியான இடத்திற்கு அனுப்புவது எளிதாகிறது .


பின்கோட் எப்படி தொடங்கியது?​


இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1972 இல் பின்கோட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், நாட்டில் தபால் விநியோக முறை, முகவரியை துல்லியமாக குறிப்பிடுவதில் மிகவும் கடினமாக நடைமுறையாக இருந்தது. சரியான இடத்திற்கு தபால்களை வழங்குவதற்கு நிறைய நேரம் எடுத்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண தபால் துறை பின்கோட் முறையை அமல்படுத்தியது.


பின்கோட் அமைப்பின் நன்மைகள் என்ன?


குறியீடு எண் அமைப்பு காரணமாக, அஞ்சலை அதன் சரியான இடத்திற்கு டெலிவரி செய்ய மிகக் குறைந்த நேரமே செலவாகும். மேலும், இந்த அமைப்பு அஞ்சல் விநியோக முறையை மிகவும் திறமையாக மாற்றியுள்ளது. பின்கோட் காரணமாக, தவறான இடத்திற்கு அஞ்சல் செல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்படுகிறது. அஞ்சல் விநியோக முறை மிகவும் எளிதானதாக உருவெடுத்துள்ளது.


பின்கோட் எப்படி வேலை செய்கிறது ?


பின்கோட் என்பது ஆறு இலக்க குறியீடு. அஞ்சல் மற்றும் தந்தி வாரியங்களில் மூத்த உறுப்பினராகவும், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் இருந்த ஸ்ரீராம் பிகாஜி வேலங்கார் அஞ்சல் குறியீட்டு எண் முறையை அறிமுகப்படுத்தினார். அதில், அஞ்சல் குறியீட்டு எண்ணின் முதல் இலக்கமானது அஞ்சல் மண்டலத்தை குறிக்கிறது. இரண்டாவது இலக்கமானது துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கமானது முதல் இரண்டு இலக்கங்களையும் சேர்த்து, அந்த மண்டலத்திற்குள் வரிசைப்படுத்தப்படும் மாவட்டத்தை குறிக்கிறது. கடைசி மூன்று இலக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள தனிப்பட்ட தபால் நிலையங்களை குறிக்கிறது.


இந்திய அஞ்சல் துறை:


31.03.2017 நிலவரப்படி, 154,965 அஞ்சல் அலுவலகங்களுடன் உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இதில் 139,067 அலுவலகங்கள் கிராமப்புறங்களில் உள்ளன. சுதந்திரத்தின் போது இந்தியாவில் ​​23,344 தபால் நிலையங்கள் இருந்தன.  இவற்றில் பெரும்பான்மையானவை நகர்ப்புறங்களில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நெட்வொர்க் ஏழு மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இந்த விரிவாக்கம் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக, ஒரு தபால் அலுவலகம் 21.56 கி.மீ., சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 7753 பேருக்கு சேவை செய்கிறது. இந்த பரந்த சேவையில் துல்லியத்தனமையை மேம்படுத்த, அஞ்சல் குறியீட்டு எண் பயன்படுத்தப்படுகிறது.