மகாராஷ்டிராவில் ஆதார் அட்டைக்கான செயலி பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 14 பேரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மான்காபூரில் உள்ள ஆதார் சேவா கேந்திரா (ASK) கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் சிதறி வாழும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோரை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.


ஆதார் அட்டைக்காக பதிவு செய்ய சிலர் வந்த போது சில குறைபாடுகளை ஆதார் சேவா மையத்தின் மேலாளர் கெளரவ கேப்டன் அனில் மராத்தே கண்டறிந்தார். பயோமெட்ரிக் சிக்கல் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தெரிய வந்தது. கடந்த ஆண்டு, இது அனைத்தும் 18 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் விண்ணப்பத்துடன் தொடங்கியது. பள்ளிக்கு ஆதார் அட்டை விவரங்கள் தேவைபட்டுள்ளது.


இதுகுறித்து விவரித்த மராத்தே, "மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் விண்ணப்பம் பயோமெட்ரிக் பிரச்னைகளால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறுவன் எட்டு வயதாக இருந்தபோது ஒரு ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் சமர்த் டாம்லே என்பவரால் வளர்க்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


சிறுவனின் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டதும், டாம்லே மான்காபூரில் உள்ள மையத்தை அணுகினார். அவர் காணவில்லை என புகாரளிக்கப்படுவதற்கு முன்பு ஆதார் அட்டைக்காக 2011ஆம் ஆண்டு அவர் விண்ணப்பத்திருப்பது தெரிய வந்தது. 


விசாரணையில் சிறுவனின் பெயர் முகமது ஆமிர் என்பதும், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனதும் தெரியவந்தது. அவரது ஆதார் விவரங்களின் உதவியுடன், அவரது குடும்பத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. அவர் அவர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார்" என்றார்.


பெங்களூரில் உள்ள UIDAI தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில் உள்ள பிராந்திய அலுவலகத்தின் உதவியுடன் மராத்தே சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களின் ஆதார் விவரங்களைப் பெற்றார்.


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட 21 வயது சிறப்புத் திறனாளி ஒருவருக்கு, பீகாரில் உள்ள அவரது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு இந்த ஆதார் மையம் சமீபத்தில் உதவியது. பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்ட அந்த நபர், நவம்பர் 2016 இல் 15 வயதாக இருந்தபோது நாக்பூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.


இதுகுறித்து விவரித்த மராத்தே, "ஆதரவற்றோர் இல்லத்தின் அலுவலர்கள் ஜூலை மாதம் ஆதார் பதிவுக்காக ஆதார் சேவா கேந்திராவுக்கு சென்று பார்வையிட்டனர். ஆனால் அந்த நபரின் விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. மேலும் விசாரணைக்குப் பிறகு, விண்ணப்பதாரரிடம் ஏற்கனவே ஆதார் இருப்பது கண்டறியப்பட்டது. அது 2016 இல் பதிவு செய்யப்பட்டது.


பின்னர், அந்த நபர் சோசன் குமார் என அடையாளம் காணப்பட்டார். பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர். ஆகஸ்ட் 12 அன்று, கட்டைவிரல் ரேகையின் உதவியுடன், அவரது அடையாளம் தெரியவந்தது. பீகாரில் உள்ள குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, ஆகஸ்ட் 19 அன்று சட்ட நடைமுறைகளை முடித்த பிறகு அவர்களுடன் மீண்டும் இணைந்தார்" என்றார்.


நாக்பூரில் காணாமல் போனவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது பற்றிய செய்திகளைப் படித்த பிறகு, பன்வேலில் உள்ள ஒரு ஆசிரமம் மும்பையில் உள்ள UIDAI மையத்தைத் தொடர்புகொண்டு, மையத்தில் வசிப்பவர்களின் விவரங்கள் கேட்டறிந்தது. பின்னர், மராத்தேவால் முகாம் நடத்தப்பட்டது. 


ஜூன் மாதம் பன்வெல்லின் வாங்கினி கிராமத்தில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான சீல் நடத்தும் ஆசிரமத்தில் முகாம் நடத்தப்பட்டது. ஆசிரமம் வீடற்றவர்களை மீட்டு, மறுவாழ்வு அளித்து, அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் இணைக்க உதவி செய்கிறது. 


இதுகுறித்து பேசிய அலுவலர் ஒருவர், "காணாமல் போன 25 பேரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 7 பேர் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேரின் குடும்பத்தினரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.