டெல்லியில் ஓடும் ரயில் பெண் மீது  ராணுவ வீரர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. 


நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில்வே துறை செயல்படுகிறது. பல்வேறு மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேசமயம் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் ரயில்களில் சக பயணிகளாலும், திருடர்களாலும் பயணம் செய்பவர்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதால் ஒவ்வொரு பெட்டிக்கும் மத்திய, மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 


இப்படியான நிலையில் டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஒரு பெண், தனது 7 வயது பெண் குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் அவருக்கு கீழ் படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இரவில் தாயும், மகளும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். அப்போது இவர்கள் இருக்கைக்கு மேலே ராணுவ வீரர் பயணம் செய்துள்ளார். ரயில் குவாலியர் ரயில் நிலையம் வந்தவுடன் தன் மீது மேல் இருக்கையில் இருந்து தண்ணீர் விழுவதை அப்பெண் உணர்ந்துள்ளார். 


முதலில் பாட்டிலில் இருந்து தண்ணீர் கசிவதாக நினைத்து விழித்து பார்த்த போது ஒருவித கெட்ட நெடி வீசியுள்ளது. உடனே எழுந்து மேல் படுக்கையில் பார்த்தபோது ராணுவ வீரருடைய உடையும் நனைந்து இருந்தது. அப்போது தான் அவர் தூக்கத்தில் சிறுநீர் கழித்தது தெரிய வந்தது. மேலும் ராணுவ வீரர் குடிபோதையில் இருந்ததையும் அப்பெண் கண்டறிந்துள்ளார். உடனடியாக அவரை எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சக பயணிகளும் சிரமமடைந்தனர். 


இதனையடுத்து அப்பெண் தனது கணவருக்கு உடனடியாக போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். அவரோ ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இந்த விஷயம் தொடர்பாக புகார் அளித்தார். உடனே தவலறிந்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் ராணுவ வீரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இணையம் வழியாக ரயில்வே அமைச்சகத்துக்கு புகார் அளித்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் சிரமமடைந்தனர்.