பழங்குடி சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்தவரின் வீடு அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. 


மத்திய பிரதேச மாநில சிஹ்தி மாவட்டம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது, பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்ததுதான். இதுகுறித்த வீடியோ வைரலானது. இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது என்றாலும் வீடியோ லீக் ஆன பின்னர் தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  வீடியோவை மையமாக வைத்து காவல்துறை விசாரணை நடத்தியதில் பழங்குடியின சமுதாய இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் அவருக்கு பாஜக எம்.எல்.ஏ. கேதார்நாத் சுக்லா மற்றும் பிற பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இதைத்தொடர்ந்து, குற்றவாளியை கைது செய்த காவல் துறை அவரை சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவரது வீட்டை அதிகாரிகள், அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக புல்டோசர் கொண்டு இடித்துள்ளனர். 


என்ன ஆனாலும் விடமாட்டோம்


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுக்லா மீது குற்றம் சாட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் உறுதி செய்யும் என்று சிங் சவுகான் கூறினார். "என்ன ஆனாலும் நாங்கள் அவரை (குற்றவாளியை) விடமாட்டோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.


பாஜகவை சேர்ந்தவர்


குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவரா என்று கேட்டதற்கு, “குற்றவாளிகளுக்கு ஜாதி, மதம் மற்றும் கட்சி கிடையாது. ஒரு குற்றவாளி ஒரு குற்றவாளி மட்டுமே. அவரை தப்பிக்க விடமாட்டோம். ” என்றார். இதே கருத்தை எதிரொலித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.