பழங்குடி இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்தது மனிதத்தன்மையே இல்லாத குற்றம் என்றும், இப்படிப்பட்ட செயல் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் அவமானப்பட வைத்துள்ளதாகவும் கூறி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
பழங்குடியின தொழிலாளி ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபர் சிறுநீர் கழித்த விடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில், சுக்லா என்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் பட்டியலினத்தை சேர்ந்த தொழிலாளி மீது பாஜகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. விசாரணையில், அந்த நபர் சுக்லா என அடையாளம் காணப்பட்டார். விசாரணைக்கு பிறகு சுக்லாவை கைது செய்த போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மனிதத்தன்மையே இல்லாத குற்றம்
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்தது மனிதத்தன்மையே இல்லாத குற்றம் என கண்டிந்துள்ளார். பாஜக நிர்வாகியின் இப்படிப்பட்ட செயல் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் அவமானப்பட வைத்துள்ளதாகவும், பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியின சகோதர, சகோதரிகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், இத்தகைய அருவறுக்கத்தக்க செயல் தான் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான பாஜகவின் உண்மையான முகமும், குணமும் என்று விமர்சித்துள்ளார்.
"கடுமையான தண்டனை”
முன்னதாக இது குறித்து பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுக்லா மீது குற்றம் சாட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் உறுதி செய்யும் என்று சிங் சவுகான் கூறினார். "என்ன ஆனாலும் நாங்கள் அவரை (குற்றவாளியை) விடமாட்டோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவரா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், “குற்றவாளிகளுக்கு ஜாதி, மதம் மற்றும் கட்சி கிடையாது. ஒரு குற்றவாளி ஒரு குற்றவாளி மட்டுமே. அவரை தப்பிக்க விடமாட்டோம். ” என்றார். இதே கருத்தை எதிரொலித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.