பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ​​2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்கு திட்டத்தை பட்டியலிட்டார். ஆனால், 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என மோடி தெரிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என சமூகவலைதளத்தில் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களுக்கு வீடு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் போன்ற விவகாரங்கள் தொடர்பாக அவர் நிர்ணயித்த இலக்குகள் பேசுபொருளாக மாறியுள்ளன. 2022 ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 2047-க்கு அவை மாற்றப்பட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.




பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) திட்ட பயனாளிகளுடன் ஜூன் 2018இல் உரையாடியபோது, ​​2022-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வீட்டை உறுதி செய்ய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறியிருந்தார்.


நமோ செயலியின் மூலம் பயனாளிகளிடம் உரையாடிய பிரதமர் மோடி, "ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் ஆனது அல்ல. இது, சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளித்து கனவுகளை நனவாக்கும் திட்டமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியனுக்கும் வீடு இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என வாக்குறுதி அளித்திருந்தார்.


அதே ஆண்டில், விவசாயிகளுடன் உரையாடிய மோடி மற்றொரு வாக்குறுதியை அளித்திருந்தார். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதியளித்தார். தனது ஆட்சியின் போது விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், "அரசின் முயற்சிகள் காரணமாக, விவசாயிகள் இப்போது கவலையற்றவர்களாக இருக்கிறார்கள். பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா போன்ற காப்பீட்டுத் திட்டங்களால் இயற்கையின் சீற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட்டனர்" என்றார்.




விவசாயிகளின் வருமானம் சராசரியாக 2018-ஆம் ஆண்டிலிருந்து 2022 இல் 1.3-1.7 மடங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்திய எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது. உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பிரதமரை அடிக்கடி குற்றம் சாட்டி வருகின்றன.


2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என மோடி அளித்த வாக்குறுதிகள் குறித்து நினைவுகூர்ந்த காங்கிரஸ் கட்சியின் கவுரவ் வல்லப், "இந்த பொய்யான வாக்குறுதிகளின் கலாச்சாரம் எப்படி எப்போது முடிவுக்கு வரும்? தவறான தகவல்களை கூறி உண்மைகளை மறைக்கும் கலாசாரத்தைப் பயன்படுத்தி 2022-ஆம் ஆண்டிற்கான வாக்குறுதிகளுக்கு புதிய காலக்கெடுவை பிரதமர் வழங்கப் போகிறாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


2019 மக்களவை தேர்தலுக்கு முன் தனது கடைசி சுதந்திர தின உரையில், 2022-ஆம் ஆண்டுக்குள், கையில் தேசியக் கொடியுடன் ஒரு மகன் அல்லது மகளை இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் என பிரதமர் கூறியிருந்தார். 2018-ஆம் ஆண்டில், அப்போதைய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயிலின் கனவு நனவாகும் என்றும், இந்த லட்சிய திட்டத்திற்கான செயல்பாடுகள் 2022-இல் தொடங்கும் என்றும் கூறினார்.


நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவை தாமதத்திற்கு காரணம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண