குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, இணைய உலகம் வழியாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிர்ச்சி கலந்து வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, மோசடியில் ஈடுபட்ட ஒரு கும்பல், குஜராத் தொழிலதிபரிடம் 2.69 கோடி ரூபாயை மிரட்டி பறித்துள்ளது.


பாதிக்கப்பட்ட தொழிலதிபர் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மோர்பியை சேர்ந்த ரியா சர்மா என சொல்லி கொண்டு இவருக்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. 


நிர்வாண வீடியோ கால்:


பின்னர், அந்த பெண் தொழிலதிபருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த காலின்போது ஆடைகளை கழற்றுமாறு அந்த பெண் அவரை வற்புறுத்தியுள்ளார். அந்த பெண்ணின் ஆசை வார்த்யைில் விழுந்த அந்த தொழிலதிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, அந்த பெண் திடீரென அழைப்பை துண்டித்துள்ளார். இதை தொடர்ந்து, மீண்டும் போன் செய்து அவரின் நிர்வாண வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.  


அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க 50,000 ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளார். தொழிலதிபரும் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறையின் இன்ஸ்பெக்டர் குட்டு சர்மா என்று ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. வீடியோ கிளிப் தன்னிடம் இருப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை அவரிடம் பறித்துள்ளார்.


தற்கொலை முயற்சி:


தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று, டெல்லி போலீஸ் சைபர் செல் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், வீடியோ எடுத்த பெண் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி 80.97 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.


அவருக்கும் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார் தொழிலதிபர். பின்னர், வீடியோவை எடுத்த பெண்ணின் தாயார் மத்திய புலனாய்வு அமைப்பை அணுகியதாகக் கூறி போலி சிபிஐ அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. பிரச்னையை முடித்து வைக்க 8.5 லட்சம் ரூபாயை அவர் கேட்டுள்ளார். 


டிசம்பர் 5ஆம் தேதி வரை, அந்த கும்பல் அவரிடம் தொடர்ந்து பணத்தை கேட்டு மிரட்டியுள்ளது. அவரும் பணத்தை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அந்த தொழிலதிபரிடம் அந்த கும்பல் பொய் கூறியுள்ளது.


பணம் மிரட்டல்:


இதையடுத்துதான், அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், ஜனவரி 10 ஆம் தேதி சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தை அணுகி 11 பேர் மீது 2.69 கோடி ரூபாயை மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்தார்.


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 387 (பணம் பறித்தல்), 170 (அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல்), 420 (ஏமாற்றுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால், இந்த விவகாரத்தில், இதுவரை, எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.