Sharad Yadav : முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனாதாதள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று காலமானார்.
அரசியல் வாழ்க்கை
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சரத் யாதவ். ஜூலை 1, 1947ல் பிறந்தார். இராபர்ட்சன் கல்லூரியிலும், ஜபல்பூர் பொறியியல் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். இவர் இந்திய அரசியலில் பல்வேறு சாதனைகளை செய்திருந்தார். இவர் ஏழு முறை மக்களவைக்கும், மூன்று முறை மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளார். முதல் முறையாக 1974ல் ஜபல்பூர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் பீகாரின் பத்வான் மக்களை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இருந்தார்.
இதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதாதள கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கைய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பிறகு, லோக் தந்திரிக் ஜனதாதளத்தை தொடங்கினார். பின்னர், 2022ல் சரத் யாதவ், ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை இணைக்கும் வகையில் எல்.ஜே.டி கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்திருந்தார்.
உடல்நலக் குறைவு
இந்நிலையில் வயது முதிர்வால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.19 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரத் யாதவின் மறைவை அவரது மகள் சுபாஷினி யாதவ் அதிகாரப்பூர்வமாக அவரது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடி இரங்கல்
சரத் யாதவ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”ஷரத் யாதவ் ஜியின் மறைவு வேதைனை அளிக்கிறது. எம்பி, அமைச்சர் என நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சரத் யாதவ்வுடன் நான் பழங்கிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும். குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தி இரங்கல்
மேலும், காங்கிரஸ் எம்.பியின் ராகுல் காந்தியின் இரங்கல் குறிப்பில், "சரத் யாதவ் சோலிச தலைவராக இருந்தார். அதேபோல மிகவும் அடக்கமானவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறப்படும். இவரை இழந்த வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
”முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. கடைசி மூச்சு வரை ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தவர். மேலும் அவரை இழந்துவாடும் குடும்பத்திருக்கு ஆழ்ந்த இரங்கல்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் சரத் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.