3 குற்றவியல் சட்டங்களின் பெயரை  மாற்றும் முடிவு வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்று சட்டம் ஆகிய வற்றின் பெயரை மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. எதிர்கட்சிகள் மற்றும் சட்டத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பின் காரணமாக தனது முடிவை திரும்ப பெறுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். 


நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா 2023, பாரதிய நயாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 -ஆம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்று சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக இந்த பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யும் போது நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளை பாதுகாப்பதே இம்மூன்று புதிய சட்டங்களின் ஆன்மாவாக இருக்கும். பிரிட்டிஷ் காலத்துச் சட்டங்கள் அவர்களின் ஆட்சியை வலுப்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவுமே உருவாக்கப்பட்டன. அதன் நோக்கம் தண்டிப்பதே, நீதி வழங்குவது கிடையாது. இரண்டு அடிப்படைகள் கொண்டு இந்த மாற்றத்தினை கொண்டு வர உள்ளோம். முதலில் ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை பாதுக்காக்கும் நோக்கில் இது இருக்கும். இந்த மூன்று சட்டங்கள் என்பது யாருக்கும் தண்டனை விதிக்காமல் நீதி வழங்குவதே முதன்மையானது. இந்த நடைமுறையில் குற்றச் செயலில் ஈடுபடாமல் இருக்கும் உணர்வினை ஏற்படுத்த வேண்டிய சூழலில் தண்டனை வழங்கப்படும்” என கூறினார்.


ஆனால் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஆங்கிலத்தில் இருக்கும் இந்த சட்டங்களில் பெயர்கள் ஹிந்தியில் வைப்பது ஏன என பலரும் கேள்வி எழுப்பினர். 3 முக்கிய சட்டங்களின் பெயர் மாற்றம் முடிவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடுமையான எத்ரிப்பு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பாராளுமன்ற நிலைக்குழுவுக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அதேபோல், சட்டங்களில் உள்ள சட்டப்பிரிவுகளின் வரிசையை புதிதாக மாற்றியமைத்தால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. எனவே பெயர் மாற்றம் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 


அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் பா.சிதம்பரம், ” ஆங்கிலத்தில் பெயர் இருக்கும் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதனை ஹிந்தியில் மொழி பெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் சட்டத்தை ஆங்கிலத்தில் சட்ட வரைவு செய்து, ஹிந்தியில் பெயர் வைப்பது சரியில்லை. அது வாயில் நுழையவில்லை” என தெரிவித்தார். 


இப்படி அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அந்த முடிவை தற்போது வாபஸ் பெற்றுள்ளது. எதிர்கட்சிகள் மற்றும் சட்டத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பின் காரணமாக இதனை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.