மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஜூன் 26, 2024) நடைபெறுகிறது. 


இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலானது நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.


மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. 


முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: 


மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்திய கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிடுகின்றனர். கொடிக்குன்னில் சுரேஷ் மனுதாக்கல் செய்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் மனுதாக்கலின்போது உடன் இருந்தனர். 


இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக சபாநாயகரை தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இந்த முறை இந்த பாரம்பரியம் உடைகிறது. 


முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் தொலைபேசியில் பேசி சபாநாயகர் பதவிக்கு ஆதரவு கோரினார். சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியதாக கார்கே தெரிவித்தார். ஆனால் இதற்கு ராஜ்நாத் சிங்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 


யார் இந்த கொடிக்குன்னில் சுரேஷ்..? 


2012 அக்டோபர் முதல் 2014 வரை மன்மோகன் சிங் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர் கொடிக்குன்னில் சுரேஷ். சுரேஷ் இதுவரை 8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி 1989, 1991, 1996, 1999, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் கே சுரேஷ் கேரளாவின் மாவேலிக்கரா தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2009-ல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஓம் பிர்லா: 


தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை பார்த்தால், ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக வரலாம் என்று கூறப்படுகிறது. 


ஒருவேளை ஓம் பிர்லா இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றால், தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை ஓம் பிர்லா பெறுவார். இவருக்கு முன், பல்ராம் ஜாக்கர் மொத்தம் 9 ஆண்டுகள் சபாநாயகராக இருந்துள்ளார். இவருக்கு முன், 1970 முதல் 1975 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் மக்களவை சபாநாயகராக இருந்தவர் குர்தியால் சிங் தில்லான்.  நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருந்தார். இதன் பிறகு 2019ல் ஓம் பிர்லாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஓம் பிர்லா சபாநாயகராக அடுத்த 5 ஆண்டுகள் நீடித்தால் அதுவும் சாதனையாக இருக்கும். இதுவரை 10 ஆண்டுகளாக எந்த சபாநாயகரும் பதவி வகிக்கவில்லை.