டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி உண்ணாவிரத இருந்து வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்ணாவிரத போராட்டம்:
டெல்லிக்கு வழங்க வேண்டிய பங்கு தண்ணீரை ஹரியானா விடுவிக்கவில்லை என கூறி கடந்த 4 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, இன்று அதிகாலை உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தின் நான்காவது நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், ஹரியானா அரசு டெல்லிக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் பங்கை கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். இதனால் என் உடல்நிலை பரவாயில்லை என தெரிவித்தார்.
எதற்காக உண்ணாவிரத போராட்டம்..?
டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ இந்த ஆண்டு கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லி மக்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் ஏங்கி உள்ளனர். கொளுத்தும் வெயிலில் டெல்லிவாசிகளின் தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது. டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. டெல்லி தண்ணீருக்காக ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை முழுமையாக நம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஹரியானாவில் இருந்து ஒதுக்கப்பட்ட தண்ணீர் இன்னும் வழங்கபடவில்லை.
டெல்லியில் மொத்த நீர் விநியோகம் 1005 MGD (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்கள்) என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதியான 613 MGD தண்ணீர் ஹரியானாவில் இருந்து வருகிறது. டெல்லிக்கு பல நாட்களாக 100 MGD தண்ணீர் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் 28 லட்சம் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஹரியானா அரசு தண்ணீர் வழங்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
இதையெடுத்து, டெல்லி மக்களுக்கு ஹரியானாவில் இருந்து உரிய தண்ணீரைப் பெற்றுத் தரக் கோரி ஜூன் 21ம் தேதி முதல் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூன் 21-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவரது எடை 65.8 கிலோவாக இருந்ததாகவும், உண்ணாவிரதத்தின் நான்காவது நாளான நேற்று 63.6 கிலோவாக குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 4வது நாளான நேற்று, அமைச்சர் அதிஷியின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தமும் குறைந்துள்ளது. இது ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.