Ayodhya: அயோத்தி ராமர் கோயிலில் வடிகால் வசதி இல்லை என தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.


அயோத்தி ராமர் கோயில்:


ராம ஜென்மபூமி கோயில் பிரமாண்டமாக திறக்கப்பட்டு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், கருவறையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் மழைக்கே கோயிலின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.  இதனால் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்துப் பேசுகையில், 2025ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைவது சாத்தியமற்றது என்று தலைமை அர்ச்சகர் தெரிவித்தார். இருப்பினும், அத்தகைய கூற்றுக்கள் கூறப்பட்டால் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.


கட்டுமானம் தொடர்பாக விசாரணை:


முதல் மழைக்கே கோயில் மேற்கூரையில் இருந்து நீர் வடிவது தொடர்பாகநடவடிக்கை மற்றும் விசாரணை வேண்டும் என தலைமை அர்ச்சகர் வலியுறுத்தியுள்ளார். பிரச்னைகள் என்னவென்பதை அறிந்து கொள்வதற்காக கட்டப்பட்டுள்ள கட்டமைப்பு குறித்து கவனம் செலுத்துவது முக்கியம் என்றும், ஓரிரு நாட்களுக்குள் அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், மழை தீவிரமடையும்போது கோயிலில் வழிபாடு நடத்துவது கடினமாகிவிடும் என தலைமை அர்ச்சகர் எச்சரித்துள்ளார்.


2025ல் கட்டுமானம் முழுமையடையுமா?


ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தொடர்ந்து பேசுகையில், ”தற்போது 2024 ஆம் ஆண்டு ஆகிறது, 2025 ஆம் ஆண்டுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிவடைய வாய்ப்பு இல்லை. தற்போது, ​​மற்ற கடவுள் சிலைகளுக்கும் தனி இடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று கூறப்பட்டால், அது நல்ல விஷயம்தான், ஆனால் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளதால், அது சாத்தியமற்றது.


அடுத்த ஆண்டுக்குள் ஆலயம் முழுவதுமாகத் தயாராகிவிடும் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இப்போது பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள கட்டிடத்தில் வரும் பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவது முக்கியம். கட்டப்பட்ட ராமர் கோயிலில் நீர் வடிகால் வசதி இல்லை. மேலே இருந்து தண்ணீர் கசியத் தொடங்கிய பிறகு சிலை இருக்கும் இடத்தில் அது தேங்க தொடங்கியது.  கசிவு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை, அது முதலில் தீர்க்கப்பட வேண்டும்” என சத்யேந்திர தாஸ் வலியுறுத்தியுள்ளார்.


பிரமாண்ட திறப்பு விழா..!


பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பிரதான, மூலஸ்தானம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.