- உலகமே இப்போது பேசும் ஒரு சோக சம்பவம் என்றால், அது 3 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு, குறைந்தது 275 பேர் உயிரிழந்த ஒடிசா ரயில் விபத்துதான். இதில், பிரதானமாக பாதிக்கப்பட்டிருப்பது கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணித்தோர்தான். இத்தனை பேரை பலிவாங்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், எனக்கு இன்னுமொரு பெயருண்டு என தம் மனதை திறக்கிறது. இதோ, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், உயிருடன் இருந்தால் அதனுடைய மனவோட்டம் எப்படி இருக்கும் என்பதைதான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
- இன்று, நேற்றல்ல, கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ரயில்வேயின் பெயர் சொல்லும் முக்கியமான சில ரயில்களில் எனக்கும் ஒரு தனியிடம் உண்டு. 1977-ம் ஆண்டு முதல், தடக், தடக் என்ற சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் நான், முதலில் வாரம் இரு முறை ரயிலாக இருந்தாலும், பிறகு வாரத்திற்கு 6 நாள் ரயிலாக மாறினேன். என் பெயருக்கு ஏற்றாற் போல், கிட்டத்தட்ட இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரம் ( கோரமண்டல் கோஸ்ட்) பெரும்பகுதி பயணிப்பதால், அக்கடற்கரையின் பெயரிலேயே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்டேன்.
- அண்மை விபத்தின் காரணமாக, குறைந்தபட்சம் 275 பயணிகள் உயிரிழந்திருப்பதால், உடைந்துப் போயிருந்த நான், இன்னும் ஓரிரு தினங்களில் பயணத்தை வழக்கம்போல் ஆரம்பித்துவிடுவேன். ஆனால், ஆறாத ரணமாக இந்த விபத்தும் உயிரிழப்பும் என் வாழ்வில் அமைந்துவிட்டது. உயிரிழப்புகளால் என்னைப் பலரும் ஏசுகின்றனர். ஆனால், உண்மையிலேயே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற இயற்பெயர் கொண்ட எனக்கு, மெடிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற இன்னுமொரு பெயரும் உண்டு.
- மெடிக்கல் எக்ஸ்பிரஸ் எனும் இந்த காரணப்பெயர் வந்ததற்கு காரணம், தினமும் குறைந்தபட்சம் 500-க்கும் மேற்பட்டோர், என் மீது சவாரி செய்து, மருத்துவ சோதனை, சிகிச்சை என பல சுகாதார காரணங்களுக்காக சென்னைக்கு வந்துச் செல்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு வந்து விட்டு, அங்கிருந்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களைச் சுமந்து வருவதும், மீண்டும் அழைத்துச் சென்று விடுவதும் எனது வேலைகளில் முதன்மையானது. இதனால்தான், வெஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் பகுதிகளில், என்னை கோரமண்டல் என அழைப்பதைவிட, மெடிக்கல் எக்ஸ்பிரஸ் அதாவது மருத்துவ எக்ஸ்பிரஸ் என்றே அழைப்பர்.
- வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுவோரில், பெரும்பாலோர் பெங்காலிகள், வடகிழக்கு இந்தியர்கள் என்பதே இதற்கு சாட்சி. சிஎம்சி மருத்துவனை சுற்றியுள்ள பகுதிகளில் பெங்காலி, அஸ்ஸாமி பேசும் உள்ளூர்வாசிகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்காலி தெரு, அஸ்ஸாமி தெரு, மணிப்பூர் தெரு என கூறுமளவுக்கு அதிகளவுக்கு அங்கு வந்துத் தங்கி சிகிச்சைப் பெறுகிறார்கள். எனவேதான், என்னை மெடிக்கல் எக்ஸ்பிரஸ் என செல்லமாக காரணப்பெயருடன் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அழைக்கிறார்கள்.
- என்னைப் போல் பல ரயில்கள் இருந்தாலும், கொல்கத்தாவிற்கு பக்கத்தில் உள்ள ஹவுராவின் சாலிமர் ரயில் நிலையத்திலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை உள்ள 1275 கிலோமீட்டர் தூரத்தை, 25 மணி நேரம் 30 நிமிடங்களில் கடப்பதால், குறைந்த செலவில் நிறைவான, வேகமான பயணத்தைத் தருவதால், மெடிக்கல் எக்ஸ்பிரஸான எனக்கு எப்போதுமே தனி சிறப்புதான். எப்போதுமே ஹவுஸ்ஃபுல்லாகத்தான் பயணிப்பேன்.
- எனக்கு எஞ்சினுடன் சேர்த்து, முதல் ஏசி 1 பெட்டி, செகண்ட் ஏசி 2 பெட்டிகள், தேர்ட் ஏசி 9 பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகள் 5, முன்பதிவில்லாதவை 2 பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் ஆகியவற்றுடன் 23 பெட்டிகள் இருக்கும். எப்போதுமே ஹவுஸ்ஃபுல் ஆகிவிடுவதால், அன்ரிசர்வ் எனும் முன்பதிவு இல்லாத 2 பெட்டிகளில், எப்போதும் குறைந்தபட்சம் 300 பேராவது பயணிப்பார்கள். எனவே, கிட்டத்தட்ட 1200 பயணிகளுடன்தான் சென்னையை நோக்கி வருவதும், அதே அளவு பயணிகளுடன் ஹவுராவின் சாலிமர் நோக்கி பயணிப்பதும் எனது வாடிக்கை.
- கிழக்கு கடற்கரையையொட்டி பல மணி நேரம் பயணித்தாலும், உள்மாவட்டங்களில் பயணிக்கும் போதும் நான், கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, பெண்ணா, நாகவளி, சுபநரேகா, பிராமணி, தாமோதர் உள்ளிட்ட 18 ஆறுகளையும் அதன் மீதான பாலங்களையும் கடந்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிழக்கு கடற்கரையில் இருந்து வீசும் வங்கக்கடல் காற்றை சுவாசித்தவாறே அதிகபட்சமாக, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் நான், இந்த முறை மட்டுமல்ல, இதற்கு முன்பும் சில விபத்துகளில் சிக்கி, மனம் உடைந்துப் போயிருக்கிறேன்.
- 1997-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் ஒடிசாவில் 75 பேரும் அதே மாநிலத்தில் 1999-ல் நடைபெற்ற விபத்தில் 50 பேரும் உயிரிழந்தனர். 2002-ல் ஆந்திராவின் நெல்லூர் அருகே ஏற்பட்ட விபத்தில் 100 பேர் காயமடைந்தனர். 2009-ல் ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 2012-ல் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் அருகே ஏற்பட்ட விபத்தில் 2 குட்டி யானைகள் உட்பட 6 யானைகள் உயிரிழந்தன. 2012 மற்றும் 2015-ல் என்னுடைய சில ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டு, எந்த உயிரிழப்பும் இன்றி தீ அணைக்கப்பட்டது. இதைத்தவிர ஓரிரு முறை சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அதையெல்லாம் மிஞ்சி, உடம்பே உறைந்துப்போகும் வகையில், தற்போது நடந்த விபத்தில், எனது பயணிகள் 275 பேர் உயிரிழந்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சி.
- ஒவ்வொரு முறையும் விபத்து நடந்தவுடன் விசாரணை குழு அமைக்கப்படுவதும், அவர்கள் சிக்னல் முதல் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளைக் காரணமாகக் கூறுவார்கள். நானும் விபத்தில்லாத ரயிலாக இருக்க வேண்டும் என எவ்வளவு முயற்சித்தாலும், தொழில்நுட்பம் என்ற பெயரில் எமன், என்னை குற்றவாளி ஆக்கிவிடுகிறான். இனியாவது, எந்தவொரு தொழில்நுட்ப கோளாறும் வரக்கூடாது என பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன்.
- கடந்த 46 ஆண்டுகளாக, ஓய்வின்றி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு என 4 மாநிலங்களில் பயணிக்கும் நான், இனியும் இப்படியொரு விபத்து மட்டுமல்ல, சிறு விபத்துகூட இல்லாமல் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு நான் மட்டுமல்ல, உங்களின் தொழில்நுட்பமும் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயம் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.
- இப்படிக்கு, உங்கள் அன்புள்ள, கோரமண்டல் எக்ஸ்பிரஸ்.
எனக்கு இன்னுமொரு பெயருண்டு… மனம் திறக்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!!!!
கே.ஷண்முகசுந்தரம்
Updated at:
05 Jun 2023 06:05 PM (IST)
நானும் விபத்தில்லாத ரயிலாக இருக்க வேண்டும் என எவ்வளவு முயற்சித்தாலும், தொழில்நுட்பம் என்ற பெயரில் எமன், என்னை குற்றவாளி ஆக்கிவிடுகிறான்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
NEXT
PREV
Published at:
05 Jun 2023 06:05 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -