ஆசிரியராகப் பணியாற்ற நடத்தப்படும் யு.ஜி.சி. நெட் தேர்வின் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரேகட்டமாக (December 2021 and June 2022 (Merged Cycles)) நடத்தப்பட்டது. 2021 டிசம்பர் தேர்வுகள் 08, 09, 11, 12 ஜூலை 2022 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.


இதற்கிடையே 2022 ஜூன் தேர்வுகள் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்து செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 8, 10, 11, 12, 13 மற்றும் 14, ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.


இதையடுத்து யு.ஜி.சி. நெட்  தேர்வின் நான்காவது நிலை தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது. விடைக் குறிப்பில் மாற்றுக் கருத்து உள்ள தேர்வர்கள், ரூ.200 செலுத்தி, விடைகளை ஆட்சேபனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு இறுதி விடைக் குறிப்பையும் யுஜிசி வெளியிட்டது.


இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வின் (University Grants commission- National Eligibility Test -(ugc net))  2021 டிசம்பர், 2022 ஜூன் மாத அமர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ளன. 




பார்ப்பது எப்படி?


* தேர்வர்கள் ugcnet@nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் செல்ல வேண்டும்.


* அதில் UGC NET December 2021 & June 2022  தேர்வு முடிவுகளை க்ளிக் செய்ய வேண்டும்.


* அதில், தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். 


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


அதேபோல தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.  


தேர்வர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in