இமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் ராம்பூரில் இன்று காலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக தகவல் சென்றுள்ளது. இதையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். துணை ஆணையர் அனுபம் காஷ்யப், மாவட்ட காவல்துறை தலைவர் சஞ்சீவ் காந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு செல்ல முடியாத சூழலும் நிலவி வருகிறது.
இதேபோல் சிம்லாவில் இருந்து 125 கி.மீ தொலைவில் இருக்கும் மண்டியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அண்டை மாநிலம் உத்தரகாண்டிலும் மேக வெடிப்பு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் பானு பிரசாத், அனிதா தேவி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இதுகுறித்து கூறுகையில், "நேற்று இரவு இங்கு மேக வெடிப்பு மற்றும் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பேரிடர் முகாமில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். கேதார்நாத் வழித்தடத்தில் நேற்று 2 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கித் தவிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.