கடும் பனிப்பொழிவு:


இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹ்தாங் பாதையில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டல் அருகே 400 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 


மணாலி-லே நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பனிப்பொழிவு ஏற்பட்டது. அதன் விளைவாக, சாலை வழுக்கும் தன்மையாக மாறியதில் வாகனங்கள் மாட்டி கொண்டது.


12 மணி நேர மீட்புபணி:


கீலாங் மற்றும் மணாலியில் இருந்து போலீஸ் குழுக்கள் கூட்டாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கின. 10 முதல் 12 மணி நேரம் வரை மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதிகாலை 4 மணியளவில் அது முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.


பனியைக் கண்டு மகிழ்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக சிக்கிய வாகனங்கள் அனைத்தும் தெற்கு போர்ட்டலை பாதுகாப்பாக கடந்து சென்றன. 


இதுகுறித்து நலாஹுவல் மற்றும் ஸ்பிட்டி பகுதியின் துணை ஆணையர்  சுமித் கிம்தா கூறுகையில், "சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன" என்றார்.


இது தொடர்பாக குலு துணை ஆணையர் அசுதோஷ் கர்க் கூறுகையில், "சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.


குவியும் சுற்றுலா பயணிகள்:


புத்தாண்டைக் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குலு மற்றும் மணாலியில் குவிந்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மணாலி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முகேஷ் தாக்கூர் கூறுகையில், "சாலையில் பல வாகனங்கள் செல்வது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.


ஆனால், வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப சுற்றுலா பயணிகள் அறைகளில் தங்குவதில்லை. மேலும், பல சுற்றுலாப் பயணிகள் அங்கீகரிக்கப்படாத விடுதிகளில் தங்கியிருப்பதாகத் தெரிகிறது" என்றார்.


 






சம்பா மாவட்டத்தின் டல்ஹெளசி, சலோனி மற்றும் சுரா பகுதிகள், பாங்கி பள்ளத்தாக்கு ஆகியவை அதிகபட்ச பனிப்பொழிவைப் பெற்றன. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து இந்த இடங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.


கோத்தியில் 15 செ.மீ பனிப்பொழிவும், அதைத் தொடர்ந்து கத்ராலா, உதய்பூர், கல்பாவில் தலா 5 செ.மீ., பூஹ் மற்றும் சாங்லாவில் தலா 4 செ.மீ., கோண்ட்லா, ஷில்லாரோ மற்றும் குகும்சேரியில் தலா 3 செ.மீ. பனிப்பொழிவு பெய்துள்ளது.