சிம்லாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாலச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா நகரில் கிருஷ்ணா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாலை 5.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அம்மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
இமாச்சல்பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச் சரிவால் பல முக்கிய சாலிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கனமழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கிலாம் என அஞ்சப்படுகிறது. சோலான், ஜடோன், பலேரா ஆகிய கிராமங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பானல் கிராமல் ஒரு பெண் உயிரிழந்தார். மண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டனர். இமாச்சலபிரதேசத்தில் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில் கனமழைக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சண்டிகர்-சிம்லா 4-வழி நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகள் திறக்கப்பட்டுள்ளது. கங்கை நதியிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது, இதைக் கருத்தில் கொண்டு, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன." என்று தெரிவித்துள்ளார்.
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ஆகஸ்ட் -12ம் தேதி வரை, ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் கீழ், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சட்லஜ், பியாஸ் மற்றும் யமுனா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளான கின்னவுர், சிம்லா, குலு, மண்டி, பிலாஸ்பூர் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. உத்தராகண்டின் கௌரிகுண்டில் நேற்று நள்ளிரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயமடைந்தனர் மேலும் பல வீடுகள் மற்றும் கடைகள் இடிந்து விழுந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) குழு தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.