காங்கிரஸ் தற்போது அகில இந்திய காங்கிரஸாக இல்லை. ஒட்டுண்ணி காங்கிரஸாக மாறிவிட்டது என மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்:
ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடினார்.
இறங்கி அடித்த பிரதமர் மோடி:
காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என குறிப்பிட்ட அவர், "காங்கிரஸ் கட்சி இப்போது ஊன்றுகோலில் மட்டுமே பிழைத்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் என எதுவாக இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.
பல 10 ஆண்டுகளாக, வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வருகிறது. ஆனால், உணவு, உடை மற்றும் உறைவிடம் ஆகியவற்றை நம்பியே மக்கள் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. காங்கிரஸும், கூட்டணிக் கட்சிகளும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஊழல்கள் நடக்கத்தான் செய்கின்றன.
காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளும் நாட்டைப் பின்னோக்கித் தள்ளுவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆயுத உற்பத்தியில் கூட அவ்வாறே செய்தனர். மகா விகாஸ் அகாடி (எதிர்க்கட்சிகள் கூட்டணி) வாகனத்தில் சக்கரங்களும் இல்லை. பிரேக்கும் இல்லை. ஓட்டுனர் இருக்கைக்கு கூட சண்டை போடுகின்றனர்.
ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதியை தூண்டிவிடும் ஆபத்தான விளையாட்டை காங்கிரசு ஆடுகிறது. தலித்துகள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தினர், வாழ்க்கையில் முன்னேறுவதை காங்கிரசு விரும்பாததால் இந்த விளையாட்டு விளையாடுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு" என்றார்.