Shocking Video:   ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


தத்தளிக்கும் ஹிமாச்சல் பிரதேசம்


வடமாநிலங்களில் கடந்த வாரம் முதல் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலையில் ருத்ரதாண்டவம் டெல்லி, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. இதில் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது ஹிமாச்சல் பிரதேசம்தான். இந்த மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


கனமழையால் அம்மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அதி கனமழையும், திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ரவி, பியாஸ், சட்லஜ், ஸ்வான் மற்றும் செனாப் உட்பட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


பதறவைக்கும் வீடியோ காட்சிகள்


கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவசர அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டும் வருகின்றனர். பொதுமக்களை மீட்க மூன்று ஹெல்ப்லைன்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி - 1100, 1070, 1077 என்ற எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இந்த கனமழையால் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 80 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்களாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 






இந்நிலையில், பிரபலமான சுற்றுலா தளமான மணாலியில் உள்ள மூன்று மாடி ஹோட்டல் திங்கள்கிழமை இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.  இந்த விபத்தின்போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, அப்போது ஹோட்டலில் யாரும் இல்லாததால் உயிரிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதேபோன்று பல இடங்களில் உள்ள சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது. 


வானிலை மையம் எச்சரிக்கை


இந்திய வானிலை ஆய்வு மைய கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு சோலன், சிம்லா, சிர்மௌர், குலு, மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல் ஆகிய இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உனா, ஹமிர்பூர், காங்க்ரா மற்றும் சம்பா ஆகிய பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.