இமாச்சல் பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில்  வளர்ச்சிப் பாதயை நோக்கி பயணிக்கும் மாநிலங்களில் ஒன்றாக அது விளங்குகிறது.      

இமாச்சல் பிரதேசம் சிறிய வரலாறு:

1948ம் ஆண்டு, சிம்லா மலைப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இமாச்சல் பிரதேசம்உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், இம்மக்கள் நாட்டின் பிற பகுதி மக்களுடன் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. உண்மையில் சொல்லப்போனால், 1857 இல் நடைபெற்ற கிளர்ச்சியின் போது, சிம்லா சமஸ்தான ஆட்சியாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு உதவி செய்தனர். நிலவுடைமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கடுமையான வேலைப்பிரிவினை (DIvision of Labour) என்பதே சமஸ்தானியர்களின் ஆட்சிமுறையாக இருந்து வந்தது.             

1948 இல் இந்திய ஒன்றியத்துக்குள் முதன்மை ஆணையரின் ஆட்சிப்பகுதியாக (Chief Commissioner Provinces) நிறுவப்பட்டது. ஜனவரி 1 இல் இந்திய அரசியலமைப்பு செயல்பாட்டுக்கு வந்த அன்று இமாசலம் சி அந்தஸ்து கொண்ட மாநிலமாக ஆனது.  1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்தேர்தலின் மூலம் இம்மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலின் வாசனையை முதன்முறையாக நுகரத் தொடங்கினர். ஆனால், இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நெடுநாள் நீடிக்கவில்லை.          

1956, இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, சி அந்தஸ்து பெற்ற மாநிலமாக இருந்த இமாச்சல் பிரதேசம் யூனியன் பிரதேசமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன், சட்டப்பேரவையை முற்றிலுமாக கலைக்கப்பட்டு, நிலப்பரப்பை தனது முழு கட்டுப்பாட்டுக்குள்  மத்திய அரசு கொண்டு வந்தது.

1966ம் ஆண்டு பஞ்சாப் மாநில எல்லை மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டங்களான Kullu, Lahaul and Spiti இமாச்சலப் பிரதேச நிலப்பரப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், இமாச்சல் பிரதேசத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. பஞ்சாபில் இருந்து குடியேறிய மக்கள் விவாசாயத் தொழிலில் (Subsistence Farming)  நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும், ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இருந்து ஜனநாயக அரசியலில் தங்களை ஈடுபத்திக் கொண்டுள்ளனர். இவர்கள், வாழும் பகுதி கீழ்நிலப்பரப்பு (Low area) என்று அறியப்படுகிறது.   

நன்றி - mapsofindia

மறுபுறம்,  மேல்நிலபரப்பு பகுதிகளில் (Upper area - kangra, Mandi)  வாழும் பழைய மக்கள் தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். பழங்கள், காய்கறிகள், வேர் பயிர்கள் போன்ற செயல்பாடுகளின் மூலம் அதிக வருமானங்களை ஈட்டி வருகின்றனர். எனவே, இந்த இரண்டு சமூகக் குழுக்களிடையே நிலவும் முரண்பாடுகளை சுற்றித்தான் இமாச்சல பிரதேச அரசியல் இயங்கி வருவதை  என்று நம்மால் தோராயமாக உணர முடியும்.     

இந்நிலையில், 1970 டிசம்பர் 18 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் இமாச்சலப் பிரதேச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி இந்தியாவின் புதிய மாநிலமாக இமாச்சலம் 1971 ஜனவரி 25 அன்று உருவானது. இவ்வாறு இந்திய ஒன்றியத்தின் பதினெட்டாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவானது. 

இமாச்சல் பிரதேசத்தின் அடிப்படை அரசியல்: 

1. இம்மாநிலத்தில் இரு கட்சி முறை மிகவும் வலுவாக உள்ளது. அதன் நிலப்பரப்பு, கல்வி விகிதம், சமூக அமைப்பு, வர்க்கப் போராட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் பாஜக, காங்கிரஸ்  என்ற இருபெரும் தேசிய கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. நிலையான பிராந்தியக் கட்சிகள் (Regional Parties) உருவாகுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் இருக்கிறது. 

2. 90களின் பிற்பகுதியில், மண்டல் ஆணைக்குழு இந்தியாவின்  அடிப்படை அரசியலை மாற்றியமைத்தது. உத்தர பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதிகாரத்தை கைப்பற்றின. ஆனால், இமாச்சல் பிரதேச அரசியல் இதற்கு முற்றிலும் விதிவிலக்காக உள்ளது. 

சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை  முற்பட்ட வகுப்பினர் % (ராஜ்புத், பிராமணர்கள் ) ஓபிசி  பட்டியலின பழங்குடியின வகுப்பினர்  
1967 41 1 15/3
1972 48 2 16/3
1977 45 4 15/3
1982 44 5 16/3
1985 45 4 16/3
1990 42 5 16/4
1993 42 7 16/3
1998 40 5 16/3
2003 42 5 16/3

                                                                                  நன்றி : CSDS 

3. எனவே, இமாச்சல் பிரதேசத்தின் அரசியல் என்பது இன்றளவும் முற்பட்ட வகுப்பினருக்கான அரசியலாக உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், ஓபிசி, தலித் அரசியல் இங்கு மிகவும் பலவீனமாக  உள்ளது.  தேசியக் கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.    

4. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், ராஜ்புத் வகுப்பின்ர் 28% ஆகவும், பிராமணர்கள் 20% ஆகவும், ஓபிசி வகுப்பினர் 10.5% ஆகவும், பட்டியலின மக்கள் 24% ஆகவும் உள்ளனர்.  தமிழகத்தை விட அதிக தலித் மக்கள் கொண்ட ஒரு மாநிலத்தில், மிகத் துடிப்பான தலித் அரசியல் இல்லாமல் இருப்பது முரண்பாடாக உள்ளது.  

5. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். இருப்பினும், அம்மாநிலத்தில் 82.80 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். கல்வியறிவில், கேரளாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இது உள்ளது.  

 

மாநில சட்டப்பேரவை

6.  இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 95.17 % ஆக உள்ளது. எனவே, இங்கே மத ரீதியிலனா உணர்வுகளை தூண்டும் அரசியலை கட்சிகள் முன்னெடுப்பதில்லை. 

7. பொதுவாக, காங்கிரஸ் கட்சி மேல் நிலப்பரப்பில் (பழைய மக்கள் வாழும் பகுதி) அதிக அரசியல் செல்வாக்கை கொண்டுள்ளது. மாறாக, பாஜக  கீழ்நிலபரப்பு பகுதிகளில் அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. 

8. அம்மாநிலத்தின் மிக முக்கியமான அரசியல் போக்கு என்னவென்றால், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியே பெரும்பாலும் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது. 1967க்குப் பிறகு, தேசியளவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்தான், மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்து வருகின்றன.   

இமாச்சல் பிரதேசம் இன்றளவும், ஒரு இனக்குழு சமூகமாகவே இருந்து வருகிறது. சுற்றுலா, தோட்டக்கலை மற்றும் விவாசயம் ஆகியவை மட்டுமே அம்மாநில அரசுக்கு நிலையான வருமானங்களை ஏற்படுத்தி  தருகின்றன. எனவே,மத்திய அரசின் நிதியுதவி அங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக சூழலையே  அம்மக்கள் விரும்புகின்றனர்.  சாதி , மதம், மொழி, இனம் என்பதைத் தாண்டி மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய சொல்லாடலே அங்கு அதிக முக்கியத்தும் பெறுகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இத்தகைய அரசியல் போக்கை நம்மால் உணரமுடியும்.    

கட்டுரைக்கு உதவி: 

1. Sharma, T. R. 1999. ‘Local Confi gurations and National Parties in Himachal Pradesh’. 

2. இமாச்சல் பிரதேச வரலாறு