இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள், குஜராத் மற்றும் மற்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலுடன் சேர்த்து டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வெற்றி:
அதில், 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பாஜக 25 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இது நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் வெற்றிபெறும் முதல் மாநில தேர்தல் இதுவாகும்.
இமாச்சலத்தில் வெற்றிபெற்றபோதிலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. முதலமைச்சர் யார் என்பதில் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. .முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக மாநிலத்தின் தலைநகர் ஷிம்லாவில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், கட்சியில் நிலவி வரும் உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உட்கட்சி பூசல்:
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதலில் நேற்று மதியம் 3 மணிக்கு நடைபெறவிருந்தது. ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக 8 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டது.
இறுதியாக, கூட்டம் நடத்தப்பட்டபோதிலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் எம்எல்ஏக்களுக்கு மத்தியில் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. எனவே, அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதிபாசிங்:
இதற்கு மத்தியில், ஷிம்லாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபாசிங்குக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவரை முதலமைச்சராக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், அங்கு பெரும் குழப்பம் நிலவியது.
இமாச்சல் அரசியலை பொறுத்தவரை, 25 ஆண்டு கால மாநில அரசியலை பா.ஜ.க.வின் பிரேம்குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும்தான் ஆதிக்கம் செலுத்தினர். இதில், வீரபத்ர சிங் காலமான பிறகு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி அவரின் மனைவி பிரதிபா சிங்குக்கு சென்றது.
பிரதிபாசிங்கை பொறுத்தவரை, அவர் தற்போது, மண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். அது, அவரது கணவர் வீரபத்ர சிங்கின் தொகுதியாகும். பிரதிபா சிங்கை தவிர, முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இரண்டு மூத்த தலைவர்கள் உள்ளனர். சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக உள்ள சுக்விந்தர்சுகு மற்றும் மூத்த தலைவரான முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.