தொடர் நிலச்சரிவாலும் திடீர் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச அரசு கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்குமாறு கோயில்களின் உதவியை நாடியுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடியால் தள்ளாடும் அரசு:
இமாச்சலப் பிரதேசம் கடந்த 2 ஆண்டுகளாக இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் என அந்த மாநிலம், பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளது. இதனால், மோசமான நிதி நிலைமையில் உள்ளது.
இந்த நிலையில், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்குமாறு கோயில்களின் உதவியை நாடியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி, இமாச்சலப் பிரதேச அரசின் சமூக நீதித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், "அரசின் தொண்டு செயல்களுக்கும் நலத்திட்டங்களுக்கும் நிதியை பங்களிக்க வேண்டுகிறோம். இமாச்சலப் பிரதேச இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில் அறக்கட்டளைகள் தொடர்ந்து பங்களிப்புகளைச் செய்கின்றன. முக்கிய மந்திரி சுக் ஆசிராய் மற்றும் முக்கிய மந்திரி சுக் சிக்சா யோஜனாவுக்கு தொடர்ந்து பங்களிக்கலாம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
கோயில்களின் உதவியை நாடியதற்கு பாஜக எதிர்ப்பு:
கோயில்களிடம் நிதி கேட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், "கோயில் அறக்கட்டளைகளுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் விரைவில் அனுப்புமாறு வலியுறுத்தி, அரசாங்கம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது.
COVID அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடியின் போது நிதி தேவைப்பட்டு, மனிதாபிமான உதவிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதி கோரப்பட்டிருந்தால், அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும்.
ஒருபுறம், காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதன் ஆதரவாளர்களையும் அவமதிக்கிறார்கள். மறுபுறம், அவர்கள் கோயில் நன்கொடைகளை தங்கள் திட்டங்களுக்கு பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த முடிவு வினோதமானது. கோயில் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் இதை எதிர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிக்க: Seeman Kayalvizhi: ”நான் தான்.. சம்மனை கிழித்ததே படிக்க தான்” - சீமான் மனைவி கயல்விழி புது விளக்கம்