உத்தரப் பிரதேசத்தில் ஐடி துறையில் வேலை செய்யும் நபர் ஒருவர், தனது மனைவி மன உளைச்சல் அளித்ததாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆண்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த சூழலில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிரை விட்டுள்ளார்.


உயிரை விட்ட கணவர்:


கடந்த சில மாதங்களாகவே, மனைவி மீது புகார் கூறிவிட்டு கணவன்மார்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தேசிய அளவில் பேசுபொருளானது.


பணத்தை கேட்டு தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்தியதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுவிட்டு, அதுல் தற்கொலை செய்தார். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 34 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியும் அவரது குடும்பத்தினரும் டார்ச்சர் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.


இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மானவ் சர்மா, தனது மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு உயிரை விட்டுள்ளார். அதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழுத்தில் கயிறை மாட்டி கொண்டு 7 நிமிடங்களுக்கு தனது மனைவி மீது புகார் கூறியுள்ளார்.


"ஆண்கள் இல்லாத ஒரு காலம் வரும்"


"இது அதிகாரிகளுக்கானது. சட்டம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்ல ஆண்கள் இல்லாத ஒரு காலம் வரும். என் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால், நான் என்ன செய்ய முடியும்? இனி அது ஒரு பொருட்டல்ல.


எனக்கு இறப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் செல்ல விரும்புகிறேன். தயவுசெய்து ஆண்களைப் பற்றி சிந்தியுங்கள். மன்னிக்கவும், எல்லோரும். தயவுசெய்து, யாராவது ஆண்களைப் பற்றிப் பேச வேண்டும். அவர்கள் மிகவும் தனிமையாக்கப்படுகிறார்கள். நான் போனவுடன் எல்லாம் சரியாகிவிடும். நான் இதற்கு முன்பும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறேன்" என மானவ் சர்மா பேசியுள்ளார்.


இவரின் குற்றச்சாட்டுகளுக்கு அவரின் மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். "அவர் தற்கொலை செய்து கொண்ட நாளில், அவர் என்னை என் தாய் வீட்டில் இறக்கிவிட்டார். அவர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும், அது என் கடந்த காலத்தைப் பற்றியது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு அப்படி நடக்கவில்லை. அவர் இதற்கு முன்பு பல முறை தன்னைத்தானே காயப்படுத்த முயன்றார். நான் அவரை குறைந்தது மூன்று முறையாவது தடுத்திருக்கிறேன். அவர் குடித்துவிட்டு என்னை அடிப்பார்" என மானவ் சர்மாவின் மனைவி தெரிவித்துள்ளார்.