உத்தரகாண்ட் மாநிலம் மனாவின் எல்லைப் பகுதியில் மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. மனாவின் எல்லைப் பகுதியில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமுக்கு அருகில் பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு:

இதில், சாலை கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களில், 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மனாவிற்கு அருகிலுள்ள ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து BRO (எல்லை சாலைகள் அமைப்பு) நிர்வாக பொறியாளர் சி.ஆர். மீனா கூறுகையில், "57 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். மூன்று முதல் நான்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, மீட்புக் குழு அங்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறது" என்றார்.

சிக்கிய தொழிலாளர்களின் நிலை என்ன?

"இந்தோ திபெத்திய எல்லை காவல் படையும் (ITBP) மற்றும் ராணுவமும் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த (NDRF) குழுக்கள் அங்கு செல்ல முயற்சி செய்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லும் பாதை தடைபட்டுள்ளது" என சாமோலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய உத்தரகாண்டி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் போது பனிச்சரிவில் சிக்கி பல தொழிலாளர்கள் புதையுண்டதாக சோகமான செய்தி கிடைத்தது.

ITBP, BRO மற்றும் பிற மீட்புக் குழுக்களால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து தொழிலாளர் சகோதரர்களின் பாதுகாப்பிற்காக நான் பத்ரி விஷாலைப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.