இமாச்சலப் பிரதேச முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுக்விந்தர் சிங் சுகு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக சிம்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்:


இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, "இன்று காலை சுமார் 11.20 மணியளவில் அவர் அழைத்து வரப்பட்டார். காஸ்ட்ரோ என்டாலஜி துறை பேராசிரியரும் மருத்துவருமான பிரமோத் கார்க் தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு இங்கு சிகிச்சை அளித்து வருகிறது. கடுமையான கணைய அழற்சி (Pancreatitis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது சீராக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இமாச்சல பிரதேச முதலமைச்சரின் உடல்நிலை குறித்து முன்னதாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். "நேற்று முன்தினம் இரவு, பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வயிற்றில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து மருத்துவர் ராகுல் ராவ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "மற்றொரு மருத்துவரின் கருத்தை கேட்பதற்காக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்" என்றார். புதன்கிழமை இரவு வயிற்றில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


உடல்நிலை எப்படி இருக்கு?


இமாச்சல பிரதேச முதலமைச்சரின் முதன்மை ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான், இதுபற்றி கூறுகையில், "முதலமைச்சர் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பயணம் செய்து கொண்டிருந்ததால், வெளியில் ஏதாவது சாப்பிட்டிருக்க வேண்டும். அதனால் தொற்று ஏற்பட்டது. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  மருத்துவமனையில் அவரை கண்காணிப்பில் வைத்திருந்தனர்" என்றார்.


சமூக ஆர்வலராக பொது வாழ்க்கையை தொடங்கியவர் சுக்விந்தர் சிங் சுகு. இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்த இவர், 1980களில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். 


இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். அவர் சிம்லாவில் இரண்டு முறை முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் 2008 இல் மாநில காங்கிரஸின் செயலாளராக ஆனார். பின்னர், மாநில தலைவர் பதவி சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து, சுகு முதலமைச்சராக பதவியேற்றார்.


இதையும் படிக்க: Narayana Murthy: "ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கனும்" இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அட்வைஸ் - கொந்தளித்த நெட்டிசன்கள்