இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு, அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. முடிவுகள், டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


இந்தியா மொபைல் காங்கிரஸ்:


இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். 2014 ஆண்டை குறிக்கவில்லை என்றும் மாற்றத்தை குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது.


கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான், வரலாற்றில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றார். கடந்த 2014ஆம் ஆண்டுதான், உறைந்த திரைகள் கொண்ட காலாவதியான தொலைபேசிகளை மக்கள் நிராகரித்துவிட்டு புதிய அரசை மக்கள் தேர்வு செய்தனர் என்றும் அது இந்திய நிலப்பரப்பையே மாற்றிவிட்டது என்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.


இந்தியா ஒரு இறக்குமதியாளராக இருந்து மொபைல் போன்களின் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் முதல் கூகுள் வரை, நாட்டில் உற்பத்தியாளர்களாக மாறுவதற்கு வரிசையில் நிற்கின்றன. எவ்வளவு ஸ்வைப் செய்தாலும் அல்லது பட்டன்களை அழுத்தினாலும் உறைந்த திரைகள் கொண்ட இயங்காத காலாவதியான தொலைபேசிகளைப் போலவே, முந்தைய அரசாங்கமும் உறைந்த நிலையில் இருந்தது.


"நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு"


ரீஸ்டார்ட் செய்த போதிலும் பேட்டரியை சார்ஜ் செய்த போதிலும் பேட்டரியை மாற்றிய போதிலும் கூட போன் வேலை செய்யவில்லை. 2014 இல், மக்கள் இதுபோன்ற காலாவதியான தொலைபேசிகளை விட்டுவிட்டு நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்தனர். 


வேகமான 5ஜி மொபைல் டெலிபோன் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியா 6ஜி துறையில் முன்னணியில் நிற்கும் நோக்கில் முன்னேறி வருகிறது. உலகமே ‘மேட் இன் இந்தியா’ போன்களைப் பயன்படுத்துகிறது. மொபைல் பிராட்பேண்ட் வேகத்தில் 118வது இடத்தில் இருந்த இந்தியா 43வது இடத்தை எட்டியுள்ளது. 5ஜி அறிமுகமான ஒரு வருடத்திற்குள் நான்கு லட்சம் 5ஜி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


குடிமக்களுக்கு மூலதனத்துக்கான வசதியை ஏற்படுத்தி தருவதும் வளங்களை ஏற்படுத்தி தருவதும் தொழில்நுட்ப வசதியை தருவதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்" என்றார்.


பிரதமரை தொடர்ந்து பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்துறை மேம்பாட்டாளராகவும், ஏற்றுமதியாளராகவும், தலைவராகவும் இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் உலகம் இன்று நாட்டை நம்பிக்கையுடன் பார்க்கிறது" என்றார்.


இதையும் படிக்க: கத்தாரில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை - அதிர்ந்து போன மத்திய அரசு