Narayana Murthy: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொன்ன கருத்துக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் சமூக வலைதளங்கில் பலரும் பேசி வருகின்றனர். 


சர்ச்சையை கிளப்பிய நாராயண மூர்த்தி:


இன்று பலரது வாழ்க்கை முறை கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற ஆப்ஷனையே தேர்வு செய்கின்றனர்.  இதனால், அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பதை விட, வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். எனவே, இந்த நவீன காலத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறுகிறது.


வேலையில் அதிக கவனம் செலுத்தினால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்றும் இது குடும்ப உறவுகளை பாதிக்கும் என்று மனநல ஆலோசகர்கள் கூறி வரும் நிலையில், தொழில்முனைவோரின் கருத்துகள்  இதற்கு எதிராகவே இருக்கிறது. இந்நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சொன்ன கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இவர் சொன்ன கருத்து ஆதரவாகவும், விமர்சித்தும் இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர். 


"70 மணி நேரம் வேலை செய்யுங்கள்”


3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் 'தி ரெக்கார்ட்' என்ற தொடக்க நிகழ்வில் பேசிய மூர்த்தி, "உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும். ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் நம்மால் வளர்ந்த நாடுளுடன் போட்டிப் போட முடியாது.  


அதனால் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், இந்தியா எனது நாடு. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி, ஜப்பானில் இந்த முறை தான் இருந்தது. எனவே, நமது இளைஞர்கள் மாறுவது மிகவும் முக்கியம்.


விளாசும் நெட்டிசன்கள்:


இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நமது வேலை உற்பத்தித்திறனை மேம்படுத்த வேண்டும். அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும். அந்த செயல்திறன் நமக்கு அங்கீகாரம் அளிக்கும், அது மரியாதையும், அதிகாரத்தையும் வழங்கும். இதனால், நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். அடுத்த 20 முதல் 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும்.  அப்போது தான் ஜிடிபியில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்” என்றார். 


நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "வாரத்திற்கு 70 மணிநேரம் என்பதில் முற்றிலும் உடன்பாடில்லை. வாரத்தில் 70 மணிநேரம் உழைத்த பிறகு அந்த நபர் என்ன சாதிப்பார்? நல்ல ஆரோக்கியம்? நல்ல குடும்பம்? நல்ல துணை? மகிழ்ச்சியா?  தனி நபர் எதை அடைவார்? என்று சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார். நாராயண மூர்த்தியின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் சரமாரியாக கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.