கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மத மாற்றத்திற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் கொண்டு வரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அதிக எண்ணிக்கையில் மக்களை மதமாற்றம் செய்ய தடை விதிக்கும் வகையில் இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின் படி, கட்டாயப்படுத்தியோ அல்லது ஆசை காண்பித்தோ ஒருவரை மத மாற்றினால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை உயர்த்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஹிமாச்சல பிரதேச மத சுதந்திர (திருத்தம்) மசோதா, 2022, குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்யப்பட்டால் அது "மாஸ் கன்வெர்ஷன்" என மசோதாவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாய மதமாற்றங்களுக்கான தண்டனையை ஏழு ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசு வெள்ளிக்கிழமை இந்த மசோதாவை தாக்கல் செய்தது. இது 18 மாதங்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த ஹிமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டம், 2019-விட மிகவும் கடுமையாக உள்ளது.
2019 சட்டமானது மாநில சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு 15 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 21, 2020 அன்று அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு பதில்தான் 2019 சட்டம் கொண்டுவரப்பட்டது. 2006 சட்டமானது குறைவான தண்டனைகளை பரிந்துரைத்தது.
இமாச்சல சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று மசோதாவை அறிமுகப்படுத்திய அம்மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர், "2019 ஆம் ஆண்டு சட்டத்தில் பெரிய அளவிலான மதமாற்றத்தைத் தடுப்பதற்கான ஏற்பாடு இல்லை. எனவே, இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறினார். மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்