இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் கடந்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.


இதற்கான முடிவுகள், நாளை அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


அதில், மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


இமாச்சலை பொறுத்தவரை, 1985க்கு பிறகு, பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் 5 முறை இமாச்சலின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான வீரபத்ர சிங் மறைவின் காரணமாக, அந்த போக்கு மாறும் என கூறப்படுகிறது.


அதற்கு ஏற்றார்போல, இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளுக்கான கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ஏபிபி நியூஸ்- சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளின்படி, பாஜக 33 முதல் 41 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வென்ற 44 இடங்களை விட குறைவானதாகும்.


அதேபோல, காங்கிரஸ் கட்சி 24 முதல் 32 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது. ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி , புதிய வரவான ஆம் ஆத்மி, ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என கூறப்படுகிறது.


வாக்கு சதவிகித்தை பொறுத்தவரை, ஏபிபி-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவின்படி பாஜக 44.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2017 தேர்தலில் பெற்றதை விட 3.9 சதவீதம் குறைவாகும். 


அதேபோல, காங்கிரஸ் 41.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது, இது 2017 தேர்தலில் பெற்றதை விட 0.6 சதவீதம் குறைவாகும். ஆம் ஆத்மி கட்சியானது 2.1 சதவீத வாக்குகளைப் பெறும் என்று ஏபிபி-சி வோட்டர் கணித்துள்ளது. 


வீரபத்ர சிங் மறைவை தொடர்ந்து, அவரின் மனைவி பிரதிபா வீரபத்ர சிங்கை இமாச்சல பிரதசே மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக அக்கட்சி நியமத்தது. இந்த முடிவு, தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


வெளியான பெரும்பாலான கருத்துகணிப்புகளில், இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.