பெண்கள் விடுதியில் இரவு நேரம் அவர்கள் வெளியே வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அவர்களின் நலனுக்காக என்று கூறப்பட்டால் தயவு செய்து அவர்களை விடுதியில் பூட்டாதீர்கள். மாறாக ஆண்களை விடுதியில் பூட்டிவையுங்கள். 8 மணிக்கு மேல் ஆண்களை வெளியே அனுப்பாதீர்கள். ஏனெனில் அவர்கள் தான் பிரச்சனை செய்கிறார்கள் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவிகள் விடுதியில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி இரவு 9.30 மணிக்கு மேல் மாணவிகள் உரிய காரணமின்றி வெளியே செல்ல முடியாது. மாணவிகளின் நன்மைக்காக இது செய்யப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விதிமுறையை எதிர்த்து 5 மருத்துவ மாணவிகளும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி யூனியன் நிர்வாகிகளும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "பெண்கள் விடுதிக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதால் எந்த பலனும் கிடைத்துவிடாது. மாணவிகள் மீது அவநம்பிக்கை கொண்டு எதையும் சாதிக்க முடியாது. ஆண்கள் தான் பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். அதனால் அவர்களை நீங்கள் அடைத்து வைக்கலாமே. 8 மணிக்கு மேல் ஆண்கள் வெளியில் வர டடை விதிக்கலாம். அப்படியென்றால் பெண்கள் சுதந்திரமாக உலா வர முடியும் தானே. கேரளா இன்னும் இதுபோன்ற தொன்மையான பழக்கவழக்கங்களில் இருந்து இன்னும் மீளவில்லை. பழமைவாதிகளை இது போன்ற முடிவுகளை எடுக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.
எத்தனை காலம் தான் நாம் மாணவிகளை பூட்டிவைக்க வேண்டும். ஒருவேளை இந்த சமூகம் அதைத்தான் விரும்புகிறதா? அப்படியென்றாலும் கூட மாணவ சமுதாயம் சார்ந்த முடிவை அவர்களைவிட ரொம்ப மூத்த வயதினர் கொண்ட சமுதாயம் எடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஒவ்வொரு வயதுக்கான சமுதாயமும் ஒரு தனி தேசம் போன்றது. அதனால் மற்றொரு பருவத்தினரின் உரிமைகளை நாம் முடிவு செய்யாமல் இருப்பதே நல்லது.
2019ல் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதாவது இந்த சமூகம் இது பற்றி வெளிப்படையாக விவாதிக்க முன்வர வேண்டும். கொரோனா காலத்தில் லாக்டவுன்கள் போடப்பட்டன. வெளியே குற்றங்கள் குறைந்தன. ஆனால் குடும்ப வன்முறைகள் அதிகரித்தன. பெண்கள் தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அமலாகின. இப்போது அரசாங்கம் குறைந்தபட்சம் கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகள் 9.30 மணிக்கு மேல் வெளியில் இருந்தால் அவர்களின் நடத்தை கெட்டுவிடும் என நம்புகின்றனர். அப்படியிருக்கும் போது அரசு என்ன செய்யும். பெற்றோர்களே தங்கள் மகள்கள் அடைத்து வைத்திருப்பதை விரும்பும்போது அரசும் அதைத்தானே செய்யும்.
எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. மாணாக்கர் நலன் கருதி கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவ்வாறாக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது ஏன் மாணவிகளுக்கு மட்டுமே கெடுபிடி விதிக்க வேண்டும். மாணவர்களுக்கும் விதிக்கலாமே. இந்த பாலின பாகுபாட்டை தான் நான் கேள்வியாக்குகிறேன்" என்று கூறியுள்ளார்.