கர்நாடக மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மார்ச் மாதம் 15ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


 இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷூ துலியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதாடினார். அப்போது, “என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்று தான். அதாவது இந்த உடையை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? ஏன்னென்றால் உச்சநீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளே பகடி மற்றும் திலகம் ஆகியவற்றை வைத்துள்ளனர்” எனக் கூறினார். அப்போது நீதிபதி குப்தா, “பகடி என்பது வித்தியாசமான ஒன்று அது அரசு குடும்பங்கள் நிறைந்த மாநிலங்களில் ஒரு சிலர் அணிந்து இருப்பார்கள். அது மதம் தொடர்பான விஷயம் அல்ல. அதை மதத்துடன் தொடர்பு படுத்த தேவையில்லை.






நம்முடைய நாடு ஒரு மதசார்ப்பற்ற நாடு. மதசார்ப்பற்ற நாட்டிலுள்ள அரசு நடத்தும் நிறுவனத்திற்கு மதம் சார்ந்த உடையை அணிந்து வர முடியுமா என்பது தான் கேள்வி? அது விவாதத்திற்கு உரியது” எனத் தெரிவித்தார். அதன்பின்னர் வாதாடிய ராஜீவ் தவான், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உலகமே உற்று நோக்கும். ஹிஜாபை பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் அணியபட்டு வருகிறது. ஆகவே இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை பெரும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.


இரண்டு உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பாக இரு வேறு தீர்ப்பை அளித்துள்ளன. கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றங்கள் இப்படி தீர்ப்பு வழங்கியுள்ளன. ஒன்று ஹிஜாப் அணிய அனுமதி வழங்குகிறது. மற்றொன்று ஹிஜாப் அணிய அனுமதி வழங்கவில்லை. ஆகவே இதில் எதை நாம் பின்பற்ற வேண்டும்” என்று வாதாடினார். அவரைத் தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “பெண்கள் இந்த சமூகத்தில் மிகவும் பாதிப்பை சந்தித்து வருவபர்களாக உள்ளனர். அவர்களிலும் பலருக்கு கல்வி கிடைக்கும் சூழல் சரியாக அமைவதில்லை. இந்த வழக்கில் கூட 6 பேரில் ஒருவர் ஒராண்டு கல்வியை இழந்துள்ளார். அவர் தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். மற்ற 5 பேருக்கும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை ”எனக் கூறினார்.


அப்போது நீதிபதி குப்தா, “ஹிஜாப் அணிய மறுப்பு தெரிவித்தால் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதை நாங்கள் எடுத்து கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.